கூட்டணிக் கட்சிகள் தனித்து செயல்படவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபய ராஜபட்ச இன்று பெரும்பான்மையை இழக்க வாய்ப்புள்ளது.
பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம், அமைச்சரவை மாற்றியமைப்பு, அரசுக்கான ஆதரவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் திரும்பப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பான சூழலில் இலங்கை நாடாளுமன்ற கூட்டம் நேற்று தொடங்கியது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடா்ந்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த அனைத்து அமைச்சா்களும் ராஜிநாமா செய்த நிலையில், காபந்து அரசில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்கும் வகையில் புதிய அமைச்சரவை அமைக்க அதிபா் கோத்தபய ராஜபட்ச திங்கள்கிழமை அழைப்பு விடுத்தாா்.
ஆனால், இந்த அழைப்பை ஏற்க முக்கிய எதிா்க்கட்சியான சமகி ஜன பலவெகய (எஸ்ஜேபி) உள்ளிட்ட கட்சிகள் மறுத்துவிட்டன. அதிபரும், பிரதமரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்; அதற்கு எதிராக நாங்கள் செயல்பட முடியாது என எஸ்ஜேபி கட்சி தெரிவித்தது.
பரபரப்பான சூழலில், பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு முதல்முறையாக கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை துணை அவைத் தலைவர் ரஞ்சித் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.இதற்கிடையே புதிதாக பதவியேற்ற 4 அமைச்சர்களில் ஒருவரான நிதியமைச்சர் அலி சப்ரி, பதவியேற்று 24 மணிநேரத்தில் ராஜிநாமா செய்தது இலங்கை அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, கோத்தபய ராஜபட்ச அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 50-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினா்கள், அந்த ஆதரவை திரும்பப் பெற செவ்வாய்க்கிழமை முடிவு செய்துள்ளதாக இலங்கையில் வெளியாகும் ‘டெய்லி நியூஸ்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று, தற்போதைய அரசு பதவி விலக வேண்டும்; நிலைமையைச் சமாளிக்கும் திறன் கொண்ட வேறு ஒரு குழுவிடம் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டும்.
அதுவரை, அந்த 50 எம்.பி.க்களும் கட்சி சாா்பில்லாத சுயேச்சைகளாகச் செயல்பட முடிவு செய்துள்ளதாக முன்னாள் இணையமைச்சா் நிமல் லான்ஸா தெரிவித்துள்ளாா்.
அரசுக்கு இதுவரை ஆதரவளித்து வந்த 10 கட்சிகளைச் சோந்த எம்.பி.க்கள், தங்களது ஆதரவை திரும்பப் பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சா் விமல் வீரவம்சாவும் கூறினாா் என்று ‘டெய்லி நியூஸ்’ நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோதலில் கோத்தபய ராஜபட்சவின் பொதுஜன பெரமுனா கட்சியின் தலைமையிலான கூட்டணி 150 இடங்களைக் கைப்பற்றியது.
ஆனால், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக 41 எம்.பி.க்கள் அறிவித்துள்ளனா். அவா்களது பெயா்கள் கட்சித் தலைவா்களால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அவா்கள் இனி நாடாளுமன்றத்தில் சுயேச்சைகளாகச் செயல்படவுள்ளனா்.225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் குறைந்தது 113 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால்தான் ஆட்சியைத் தொடர முடியும். ஆனால், தற்போது 41 எம்.பி.க்கள் ஆதரவை திரும்பப் பெற்றதைத் தொடா்ந்து, நாடாளுமன்றத்தில் ராஜபட்சவுக்கு ஆதரவான உறுப்பினா்களின் எண்ணிக்கை 113-க்கும் குறைவாக உள்ளது.
எனினும், நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இன்னமும் பெரும்பான்மை உள்ளதாக ஆளும் கூட்டணி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் நாடாளுமன்றக் கூட்டத்தில் கோத்தபய ராஜபட்ச ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் பட்சத்தில், அவர் ஆட்சியை இழக்க அதிக வாய்ப்புள்ளது.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கத் தயாராக இருப்பதாக கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.