• Sun. Dec 1st, 2024

மத்தியப்பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றுமா..!

Byவிஷா

Nov 17, 2023

மத்தியப்பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப்பிரதேச தேர்தல் நிலவரம்படி, மொத்தமுள்ள, 230 சட்டமன்ற தொகுதிகளில், காங்கிரஸ் 113 இடங்களிலும், பாஜக 107 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை அமைத்தது. முதல்வராக கமல்நாத் பொறுப்பேற்றார்.
ஆனால், ஆட்சி அமைத்த ஒன்றறை வருடத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலருமாக இருந்த, ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் கூட்டாக ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்ததால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இதனை அடுத்து, நடந்து முடிந்த இடைத்தேர்தலில், பாஜக பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை கைப்பற்றியது. 2020 மார்ச்சில் சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக பொறுப்பேற்றார்.
அதனால், இந்தத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளது. கடந்த முறை கூட்டணி ஆட்சி அமைத்தாலும், அதனை தக்க வைக்க முடியாத காரணத்தால் இந்த முறை பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியும், இந்த முறை பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (நவம்பர் 17) 230 தொகுதிகளுக்கும் தேர்தல் வாக்குப்பதிவானது மொத்தம் 64,626 வாக்குசாவடிகளில் நடைபெற்று வருகிறது. மூன்று மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். நக்சல் பாதிப்பு கொண்ட மாண்ட்லா, பாலாகாட் மற்றும் திண்டோரி மாவட்டங்களில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
வாக்குச்சாவடிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும் வாகனங்கள் அனைத்தும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு வாகனங்கள் செல்லும் பாதை முழுக்க கண்காணிக்கப்படும். வாகன பாதையில் இருந்து விலகல் ஏற்பட்டால், உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துவிடும். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் மாநிலம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 335 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 39 கோடி ரூபாய் ரொக்கப்பணம் 63 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத மதுபானம் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அனுபம் ராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *