• Sun. Apr 28th, 2024

இன்று கார்த்திகை 1.., சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு..!

Byவிஷா

Nov 17, 2023

இன்று கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.
இன்று (நவம்பர் 17) தமிழ்மாத கார்த்திகை 1ஆம் தேதி முதல் சபரிமலை செல்லும் பக்த்ர்கள் தங்கள் விரத முறைகளை ஆரம்பித்து கேரளாவில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்ல ஆரம்பித்து விடுவர். கார்த்திகை 1ஆம் தேதியை முன்னிட்டு நேற்று (நவம்பர் 16) மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. வழக்கம் போல இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடல் ஒலிக்கப்பட்டு நடை சாத்தப்பட்டது. அதன் பிறகு இன்று அதிகாலை 3 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று முதலே சபரிமலைக்கு பக்தர்கள் வருகை தொடங்கிவிட்டது. இனி வரும் நாட்களில் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை வேலைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மண்டல பூஜைக்காக நேற்று திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில் தினமும் காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பூஜைகள்,, நெய் அபிஷேகம் செய்யப்படும் அதன் பிறகு இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடல் ஒலிக்கப்பட்டு நடைசாத்தப்படும். வரும் டிசம்பர் 27அன்று சபரிமலையில் மண்டல பூஜையானது நடைபெறும். அன்று இரவு நடைசாத்தப்பட்டு, பிறகு டிசம்பர் 30ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்படும்.
மகரவிளக்கு பூஜையானது, வரும் ஜனவரி மாதம் 15ஆம் தேதி நடைபெற உள்ளது அதன் பிறகு படி பூஜை நடைபெறும் இதன் காரணமாக ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை தரிசனத்திற்காக திறந்து இருக்கும். 48நாள் ஒரு மண்டலம் விரதம் இருக்கும் பக்தர்கள் மண்டல பூஜைக்கு பின்னர் அதிகளவு வருவார்கள்.
நேரடியாக பம்பை வழியாக பக்தர்கள் வருவதை காட்டிலும், பெருவழி எனும் கரடு முரடான காட்டுப்பாதை வழியாக வரும் பக்தர்கள் கூட்டமே அதிகம். இதனால் வனவிலங்குகளிடம் இருந்து பக்த்ர்களை பாதுகாக்க AYYAN எனும் மொபைல் செயலியை சபரிமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அந்த செயலியில் செல்லும் வழியில் வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை பற்றி தகவல் கூறும். அதே போல அதில் அவசர மருத்துவ சேவையை அழைக்க வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் பெருவழி யாத்திரையின் போது பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *