இராஜபாளையம் பகுதியில் மா சீசன் தொடங்கியதால் அடிவாரத்தில் முகாமிட்டுள்ள யானைகள் வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் மா (மாங்காய்) அறுவடை சீசன் தொடங்கியதை அடுத்து, மாம்பழங்களை சாப்பிடுவதற்காக அடிவார பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இராஜபாளையம் அடுத்துள்ள சேத்தூர், தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் 5 ஆயிரம் ஹெக்டேர் மாமரங்களும் 3 ஆயிரம் ஹெக்டேர் தென்னையும் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் ஊடு பயிராக வாழை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இராஜபாளையம் பகுதியில் மாங்காய் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மா சீசனுக்கு மாம்பழங்களை சாப்பிடுவதற்காக காட்டு யானைகள் மலையடிவார பகுதிகளில் முகாமிட்டு உள்ளது. இரவு நேரங்களில் தோட்டத்திற்குள் புகும் காட்டு யானைகள் மாம்பழங்களை உண்டு விட்டு, வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் பிராவடி பீட் செல்லப்பிள்ளை ஊரணி பகுதியில் உள்ள சீதாராமன், முருகன், கணபதி, பரமசிவம் ஆகியோருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் குட்டியுடன் புகுந்த இரு காட்டுயானைகள் 30 வாழை, 5 தென்னை மரங்களை சேதப்படுத்தி சென்றுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறை மற்றும் தோட்டக்கலை துறையினர் சேதங்களை மதிப்பீடு செய்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்..,
மா சீசன் காலங்களில் யானைகள் மாம்பழங்களை உண்பதற்காக வனப்பகுதியை விட்டு தோட்டத்திற்குள் வருவது வழக்கம். ஆனால் இப்பகுதியில் வனப்பகுதியை விட்டு 3 கிலோமீட்டர் வெளியே வந்து தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்துவது இதுவே முதல்முறை. யானைகள் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.