ஒரு சில விஷயங்களை காரணமே இல்லாமல் நாம் காலம் காலமாக செய்து வருகிறோம். அதில் ஒன்றுதான் மொய்ப்பணத்துடன் ஒரு ரூபாய் சேர்த்து வைப்பது. அது ஏன் என்பதை தெரிந்து கொள்வோம். வாருங்கள்!
கல்யாணம், காது குத்து, கிரகப்பிரவேசம், மஞ்சள் நீராட்டு விழா, இப்படி எந்த சுப நிகழ்ச்சிகளின்போதும் மொய் செய்வது நம்முடைய முன்னோர்களின் பழக்கம்..
அப்படி மொய் செய்யும்போது 100, 500, 1000 என்று மொய் செய்யாமல் அதனுடன் ஒரு ரூபாயையும் சேர்த்து வைத்து மொய் செய்து கொண்டிருக்கிறோம். எல்லாவற்றுக்குமே முன்னோர்கள் ஒரு காரணத்தை வைத்துள்ளதைப்போல, இதற்கும் சில காரணங்களை வைத்திருக்கிறார்கள்.. அதாவது, அந்தக்காலத்தில் எல்லாம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் கிடையாது.. பணம் என்பது பொன் மற்றும் வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகத்தில் நாணயங்கள் வடிவத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டிருந்தன.. இவைகள்தான் புழக்கத்திலும் இருந்து வந்தன… இவைகளை கொண்டுதான் மொய்ப்பணம் தந்து வருகிறார்கள்..
ஒரு வராகன் பொன் என்பது 32 குன்றி எடை (குண்டுமணி) அந்த 32 என்பது, முப்பத்திரண்டு வகையான தர்மங்களை குறிப்பதாகும்.. அதனால்தான், இது தர்மம் தவறாது சம்பாதித்த நாணயமாக முன்னோர்கள் கருதினார்கள்.
அதுபோலவே, நீங்களும் தர்மம் வழுவாமல் இந்த பணத்தை செலவிடுங்கள் என்பதை நினைவூட்டும் வகையில்தான், மதிப்புமிக்க உலோக நாணயங்களை, மொய்ப்பணமாக தந்தார்களாம்.. மொய் செய்பவருக்கும்தான் ஒரு மதிப்புமிக்க பொருளை அன்பளிப்பாக கொடுத்ததாக ஒரு மனநிறைவு கிடைக்குமாம்.. இதற்கு பிறகு ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் வந்துவிட்டன.. எனினும், உலோக நாணயங்களை போல் நோட்டுத்தாள்கள் உண்மை மதிப்பு கொண்டவை கிடையாது. ரூபாய் தாளை மொய்ப்பணமாக தருபவர் மனதிலும், உண்மையான மதிப்பு கொண்ட பணத்தை மொய்யாக செய்யவில்லை என்ற மனக்குறை இருக்கவே செய்யும்.. இவைகளெல்லாம் முற்றிலும் நீங்கும் வகையில்தான், மொய்ப்பணமாக எத்தனை ரூபாய் கட்டுக்கள் வைத்தாலும், அதனுடன், நிஜமான மதிப்பு கொண்ட, ஒரு வெள்ளி ரூபாய் நாணயத்தையும் சேர்த்துக் கொடுக்கும் பழக்கத்தை கடைப்பிடித்துள்ளனர்.. அதுமட்டுமல்ல, மதிப்புமிக்க வெள்ளியில்தான் நாணயங்களும் உருவாக்கப்பட்டன.. அதனாலேயே மொய்ப்பணத்தில், 101, 501, 1001 என்று ஒரு ரூபாய் சேர்த்து வைக்கும் பழக்கம் மரபானது என்கிறார்கள்..








