நாடே போர் பதற்றத்தில் உள்ளது. 6 மாநில மக்கள் தவிக்கிறார்கள். இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் புதுச்சேரியில் இரவு ஒரு மணி வரை, இளைஞர்கள் இளம்பெண்கள் குடித்துவிட்டு நடனம் ஆடுவதை துணைநிலை ஆளுநர் எவ்வாறு அனுமதிக்கிறார் என்று அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இந்திய நாட்டு ராணுவ வீரர்கள் உயிரை துச்சமாக நினைத்து எல்லையில் போர் செய்து நம்மை பாதுகாத்து வருகின்றனர். போர் பதற்றத்தினால் ஆறு மாநில முதல்வர்கள் மற்றும் மக்கள் தூங்காமல் தினம், தினம் பயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தாக்குதல் நிலவரம் குறித்து, பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ஆனால் புதுச்சேரி அரசானது இது பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் இரவு ஒரு மணி வரை நகர பகுதிகளில் ரெஸ்டோ பார்களை திறந்து வைத்துள்ளது.
இங்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் இளைஞர்கள், இளம்பெண்கள் இரவு ஒரு மணி வரை குடித்துவிட்டு கும்மாளமாடுகிறார்கள். நாடே போர் பதற்றத்தில் இருக்கும்போது இது போன்ற செயல்கள் முதலமைச்சருக்கு தெரியாதா என்று கேள்வி எழுப்பிய அன்பழகன் இதையெல்லாம் துணை நிலை ஆளுநர் எவ்வாறு அனுமதிக்கிறார் என்றார்.
நகரப் பகுதியில் இருக்கும் மதுபான கடைகளை போலீசாரும் கண்டுகொள்வதில்லை என்று குற்றம் சாட்டிய அன்பழகன் இரவு 11 மணிக்கு மேல் மக்கள் கூட்டமாக கூட வேண்டாம் என்று உத்தரவு போடும் மாவட்ட ஆட்சியர் இரவு ஒரு மணி வரை திறந்திருக்கும் ரெஸ்டோ பார்களை ஏன் கண்டு கொள்ளவில்லை என கேள்வி எழுப்பினார்.





