பாஜகவுக்கு தமிழ்நாட்டில் பிரதிநிதித்துவம் உறுதியாக உண்டென்றால் அது குமரி மாவட்டத்தில்தான். கூட்டணி இருந்தால்தான் மற்ற மாவட்டங்களில் பாஜக கால் பதிக்க முடியும். ஆனால் கூட்டணி இல்லையென்றால் கூட பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் மாவட்டம் குமரி மாவட்டம் மட்டும்தான்.
இப்படிப்பட்ட குமரி மாவட்டத்தில் இப்போது நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி பாஜக உறுப்பினராக இருக்கிறார் எம்.ஆர். காந்தி.
2021 சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ் ராஜனை 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் எம்.ஆர். காந்தி.
இப்போது மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணியோடு களமிறங்கும் நிலையில் குமரியிலேயே பாஜகவுக்கு மிக சாதகமான தொகுதியாக கருதப்படுவது நாகர்கோவில்தான்.
எனவே தற்போதைய எம்.எல்.ஏ. வான எம்.ஆர்.காந்தி மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். அதேநேரம், நாகர்கோவில் தொகுதியை குறி வைத்து பொன்னார், தமிழிசை என மூத்த தலைவர்களும் ரகசியமாக முயற்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாஜக வட்டாரங்களில் அரசியல் டுடே சார்பில் விசாரித்தபோது..
”நாகர்கோவிலில் இப்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாஜகவின் எம்.ஆர். காந்தி சில மாதங்கள் முன்பாக மீண்டும் போட்டியிடவில்லை என்ற முடிவில் இருந்தார். அதிமுக -பாஜக கூட்டணி உறுதியான பின்பு, செருப்பு அணியாத எம்.ஆர். காந்தி மீண்டும் எம்.எல்.ஏ. பதவியை அணியை ஆசைப்படுகிறார்.

அதேநேரம் பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். இராதாகிருஷ்ணன் 12வது முறையாக தேர்தல் களம் காண நாகர்கோவில் தொகுதியை குறிவைத்துள்ளார்.
தேசிய கட்சியின் வழக்கப்படி தனது விருப்பத்தை மாநிலத் தலைவர் நயினாரிடம் தெரிவிக்காமல் நேரடியாக தனது டெல்லி சோர்ஸுகள் மூலமாக அமித் ஷாவிடம் கொண்டு சென்று, நாகர்கோவிலில் சட்டமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடும் முயற்சியில் அதி தீவிரமாக ஈடுபட்டுவருகின்றார்.
கட்சியின் மூத்தவர்கள் மத்தியில் பொன்னாருக்கு போட்டியிடும் வாய்ப்பு கொடுக்க கூடாது என்ற எதிர்ப்பு உள்ளது என்பது அவருக்கே தெரியும். ஆனாலும் தனக்கு ஒருவேளை கிடைக்காமல் போனாலும் அந்த வாய்ப்பு மீண்டும் எம்.ஆர். காந்திக்கு எந்த நிலையிலும் கிடைத்து விடக்கூடாது என்பதே பொன்னாரின் திட்டம். ஏனென்றால் இந்த இருவருக்குமான குமரிப் பஞ்சாயத்துக்கு பல வருடம் வரலாறு உண்டு.
ஆர்எஸ்எஸ்_யின் சித்தாந்தமான, அகவை 75 பதவியில் இருந்து ஓய்வு என்ற அளவுகோலை பொன்னார், காந்தி இருவருமே தாண்டி விட்டதை கட்சி சுட்டிக் காட்டினால்… தனக்கு பதிலாக இப்போதைய நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் மீனா தேவ் பெயரை பரிந்துரை செய்யவும் திட்டம் வைத்துள்ளார் பொன்னார்.
பொன்னார், காந்தி இருவரையும் தாண்டி நாகர்கோவில் தொகுதியை குறிவைத்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் முன்னாள் ஆளுநரும், மாநிலத் தலைவருமான டாக்டர் தமிழிசை. மண்ணின் மகள் என்ற அடையாளத்தோடு குமரி அனந்தன் தேசியம் வளர்த்த குமரியில் இருந்து சட்டமன்றம் செல்வது என்பதில் தீவிரமாக இருக்கிறார் தமிழிசை.
பாஜகவின் தமிழக தலைவரான நயினார் நாகேந்திரன் வழியாக முயற்சிப்பதை விட தனக்கு பரிச்சயமான டெல்லி லாபி மூலமாக இடைவிடாமல் இயங்கி வருகிறார் தமிழிசை.

இவர்களுக்கு இடையில் நாகர்கோவில் பாஜகவின் பொருளாளராக பல ஆண்டுகளாக இருக்கும் இப்போதைய நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் முத்துராமன் தேர்தலில் போட்டியிட்ட முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.
கடந்த பல பத்தாண்டுகள், கட்சி நிகழ்ச்சிகள்,இந்து கோவில்கள் திருவிழா, கொடை என செலவு செய்துள்ள முத்துராமன், “நாகர்கோவிலுக்கு இறக்குமதி வேட்பாளர் வேண்டாம்” என்ற வேண்டுகோளை இப்போதே நயினார் மூலமாக டெல்லிக்கு வைக்கத் தொடங்கிவிட்டார்.
இந்த வகையில் நாகர்கோவில் தனக்கு எதிர்ப்பு வந்தால் நாகர்கோவில் அல்லது நாங்குநேரி என சாய்ஸ் வைத்து இரு தொகுதிகளிலும் தனது ஆரம்பகட்ட வேலைகளை முடுக்கியிருக்கிறார் டாக்டர் தமிழிசை” என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில்.
நாகர்கோவில் தொகுதிக்கு பாஜகவில் கடும் போட்டி இருப்பது உண்மை. அதிமுக-பாஜக கூட்டணியில் இத்தொகுதி சிட்டிங் தொகுதி என்ற அடிப்படையில் பாஜகவுக்கே கிடைக்கலாம். ஆனால் பாஜகவில் யாருக்கு என்பதுதான் இப்போதைய ட்விஸ்ட்!













; ?>)
; ?>)
; ?>)