சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில், ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு “ஈழத்தமிழருக்கு விடியல்” என்ற தலைப்பில் நடைபெற்றது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் ஈழத் தமிழர் விடுதலைக்காக உயிர் நீத்தவர்களுக்கு வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். அதன்பிறகு மேடையில் பேசிய வைகோ, இந்தியா இன்று இலங்கைக்கு உதவுகிறது. ஆனால் இந்திய அரசு கடந்த 2009-ஆம் ஆண்டில் 1.5 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அதனை ரசித்ததா, மனசாட்சி உள்ளதா இந்திய அரசுக்கு ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இலங்கை நாட்டில் அதிபராக யார் வந்தாலும் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு விரோதமாக தான் இருப்பார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார். எனது வாழ்நாளில் கிடைத்த மிகச் சிறந்த பரிசு வேலுப்பிள்ளை பிரபாகரன் தனக்கு எழுதிய கடிதம்தான் என்று தெரிவித்துள்ளார். பொது வாக்கெடுப்பை நடத்தி இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கருத்தை முதல்முறையாக தான் ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் எழுப்பியதாகவும், தம் வாழ்நாளில் அதுதான் பெருமையாகவும், சாதனையாகவும் இருந்ததாக வைகோ கூறியுள்ளார்.