

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம், இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா என நான்கு மாநிலங்களில் பாஜக பெரும் வெற்றியை பதிவு செய்யும் நிலை உள்ளது. பஞ்சாபில் தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அங்கு தோல்வியை தழுவுகிறது. ஆம் ஆத்மி பெரும் வெற்றி பெறும் சூழல் உள்ளது. மொத்தமாக 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் பெரும் தோல்வியை தழுவியுள்ளது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். வென்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அனைத்து காங்கிரஸ் தொண்டர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம். இந்திய மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்.” எனக் கூறியுள்ளார்
