5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் அக்கட்சியின் எம்பி கார்த்திக் சிதம்பரம் சுட்டுரையில் பதிவிட்டுள்ள கருத்து விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. இதில் பஞ்சாப் தவிர்த்த மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி பஞ்சாப்பில் ஆட்சியை இழந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மோசமான தோல்வியைத் தழுவியுள்ள காங்கிரஸ் கட்சி உத்தரகண்ட் மற்றும் கோவாவில் குறைவான இடங்களையே பெற்றுள்ளது. தோல்விக்கு மத்தியில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்திக் சிதம்பரம் தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள கருத்துக்கு பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். அவர் தனது சுட்டுரைப் பதிவில், “இப்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்க வேண்டிய படங்களின் பரிந்துரைகளை வழங்குங்கள்” என பதிவிட்டுள்ளார்.
தற்போது காங்கிரஸ் வசம் ராஜஸ்தான் மற்றும் சத்திஷ்கர் மட்டுமே உள்ளது. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிந்து வரும் வேளையில் அக்கட்சியின் எம்பி கார்த்திக் சிதம்பரத்தின் பதிவு பொறுப்பற்ற தன்மையில் இருப்பதாக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.