பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்விக்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்; கிலோமீட்டருக்கு 3 – 5 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர் வெயில், மழை என்று பாராமல் வேலை செய்தும் எந்த பலனும் இல்லை என ஸ்விக்கி ஊழியர்கள் வேதனை.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களை ஸ்விக்கி நிறுவனம் போலீசாரை வைத்து மிரட்டுகின்றனர்
ஸ்விக்கி (Swiggy) ஊழியர்களை தொழிலாளர்களாக அங்கீகரித்து அனைத்து சட்ட உரிமைகளும் வழங்கிட வேண்டும்,அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான பழைய ஊதிய முறை தொடர வேண்டும், சீனியர் ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கி வந்த சலுகைகளை மீண்டும் வழங்கிட வேண்டும், ஒரு கிலோமீட்டருக்கு 10 ரூபாயும் , ஒரு ஆர்டருக்கு குறைந்த பட்டசம் 30 ரூபாயும் வழங்கிட வேண்டும், அதோடு பேட்ச் ஆர்டருக்கு 20 ரூபாய் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்விக்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது,
அப்போது பேசிய அவர்கள்,
இன்றிலிருந்து ஸ்விக்கி நிறுவனத்திற்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறோம், இந்த வேலையை நிறுத்தத்தில் ஈடுபடும் சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு இருக்கிறோம்.
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மார்ச் மாதமே ஸ்விக்கி நிறுவனத்திற்கு கோரிக்கை மனுவை அனுப்பி இருந்தோம் ஆனால் அதன் மீது ஸ்விக்கி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக கடந்த 4 ஆம் தேதி ஸ்விக்கி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி வைத்தோம் அதோடு தொழிலாளர் நல ஆணையரிடமும் இது தொடர்பாக வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்துள்ளோம்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களை ஸ்விக்கி நிறுவனம் போலீசாரை வைத்து மிரட்டுகிறது தற்பொழுது கூட பெரம்பூர் பகுதியில் செல்வம் என்னும் ஊழியர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டி உள்ளனர்.
ஸ்விக்கி நிறுவனத்தின் தொடக்க காலத்தில் ஊழியர்களுக்கு கிலோமீட்டருக்கு ஐந்து ரூபாய் வழங்கப்பட்டது, தற்பொழுது பெட்ரோல் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது இப்பொழுதும் அதே ஐந்து ரூபாய் வழங்கி வருவதால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம். எனவே தற்பொழுது கிலோமீட்டருக்கு பத்து ரூபாய் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்
கொத்தடிமைகளை போல நாங்கள் வேலை செய்து வருகிறோம், கொரோனா காலகட்டம் வெயில், மழை என்று பாராமல் ஸ்விக்கி ஊழியர்கள் வேலை செய்து வருகிறோம் எனவே பொதுமக்களும் எங்களது போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும்.
மாநிலம் முழுவதும் 10,000 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், ஸ்விக்கி நிறுவனம் எங்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் போராட்டம் தொடரும் என்று கூறினர்.