டெல்லியில் காற்று மாசைக் குறைப்பதற்காக வீதி வீதியாக தண்ணீர் வாகனத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லிக்கு அருகாமையில் உள்ள ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் மீதமுள்ள விவசாய பொருட்களை எரிப்பதால் வரும் புகையானது டெல்லி காற்றை அதிகளவில் பாதிக்கிறது.
மேலும், டெல்லியில் அதிகரித்து வரும் வாகனப் பயன்பாடும் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கக் காரணமாக அமைகிறது. அதனைக் கட்டுப்படுத்தவும், வாகனக் கட்டுப்பாட்டை அரசு அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது. அதே போல, காற்று மாசுவை கட்டுப்படுத்த வீதிகளில் தண்ணீரை ஸ்ப்ரே போல தெளிக்கும் நடைமுறையும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்திய காற்று மாசு குறியீட்டில் டெல்லி காற்று மாசு இன்று AQI (Air Quality Index) 293 எனும் மோசம் (Poor) எனும் நிலையில் இருக்கிறது. நேற்று இதன் அளவீடு பல்வேறு பகுதிகளில் யுஞஐ 350 முதல் 380 எனும் மிகவும் மோசம் (Very Poor) எனும் அளவில் இருக்கிறது.
இதனைக் கட்டுப்படுத்த தண்ணீர் தெளிப்பான் வாகனம் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காற்று மாசுவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆனந்த் விஹார் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஸ்ப்ரே செய்து தண்ணீர் காற்றில் தெளிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ப்ரே செய்யும் வாகனங்கள் மூலம் சராசரியாக ஒரு நாளைக்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருவதாகவும், அந்த தண்ணீரானது அதிக அழுத்தம் கொண்டு பனி போல தெளித்தால் மட்டுமே அது காற்று மாசுவை குறைக்கப் பயன்படும் என்றும் இல்லையென்றால் அது காற்று மாசுவைக் குறைக்கப் பயன்படாது என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.