• Sat. Nov 14th, 2026

இட்லி தட்டில் விரல் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை – லாவகமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

BySeenu

Nov 14, 2026

கோவையில் ஒன்றரை வயது குழந்தையின் விரல் இட்லி தட்டில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று காலை கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு பெற்றோர்கள் அவசர அழைப்பு விடுத்துள்ளனர். தங்களது ஒன்றரை வயது குழந்தையின் விரல் இட்லி தட்டில் சிக்கிக் கொண்டதாகக் கூறி பதற்றத்துடன் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, குழந்தையை தீயணைப்பு நிலையத்திற்கு பெற்றோர்கள் அழைத்து வந்துள்ளனர். அங்கு பணியில் இருந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினர், குழந்தையின் விரலில் சிக்கியிருந்த இட்லி தட்டை மிகவும் லாவகமாக அறுத்து அகற்றி, எவ்வித பாதிப்புமின்றி விரலை மீட்டனர்.

இதனால் நிம்மதியடைந்த பெற்றோர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும், குழந்தைகள் விளையாடுவதற்குக் கொடுக்கும் பொருட்களில் விரல், கை அல்லது கால்கள் சிக்கிக்கொள்ளும் வகையிலான துளைகள் இருந்தால், அத்தகைய பொருட்களை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.