• Tue. Mar 19th, 2024

ஆண்டிப்பட்டி அருகே 58-ஆம் கால்வாயில் தண்ணீர் கசிவு . பீதியில் கிராம மக்கள்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தேனி மாவட்டம் வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து. கடந்த மாதம் 71அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதும் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. வைகை அணையில் 67 அடி நிரம்பியதும் 58- ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

அதனடிப்படையில் தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து 58-ஆம் கால்வாயில் கடந்த மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. கால்வாய் வழியாக விநாடிக்கு 160 கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது. இதன் மூலம் 58 கிராம பகுதிகளில் உள்ள 33 கண்மாய்களில் நீர் நிறைந்து மறுகால் ஓடுகிறது.

இந்நிலையில் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள வேகவதி ஆசிரமம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள கால்வாயில் திடீர் என்று நீர் கசிவு ஏற்பட்டது. நேரம் செல்ல, செல்ல நீர் கசிவு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து வருகின்றனர். இந்த பகுதியில் பல ஏக்கர் விவசாய நிலங்களும், கல்குவாரிகளும் உள்ளன. இதனால் பொதுப்பணித்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நீர் கசிவு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி கால்வாயில் உடைப்பு ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *