• Mon. May 29th, 2023

தொடர் சண்டை மற்றும் காலநிலை மாற்றத்தால் சிரியாவில் தண்ணீர் நெருக்கடி!

ஏறக்குறைய 70 ஆண்டுகளில் இல்லாத மோசமான வறட்சியை தற்போது வடகிழக்கு சிரியா அனுபவித்து வருகிறது. அதிகரித்து வரும் வெப்பநிலை, சீரற்ற வானிலை மற்றும் துருக்கியுடனான பதட்டங்களால் இந்த நிலை இன்னும் மோசமடைகிறது.

ஆலிவ் விவசாயி அஹ்மத் மஹ்மூத் அலாஹ்ரி இந்த ஆண்டு வறட்சியால் சுமார் 3,000 மரங்களை இழந்துள்ளார்.

52 வயதான அவர் உலர்ந்த, இறந்த மரத்தின் ஒரு பகுதியை உடைத்து தூசி நிறைந்த சாம்பலை தரையில் வீசுகிறார். “நானும் எனது சகோதரனும் ஒருமுறை இங்கு 8,000 மரங்களை நட்டோம். ஆலிவ் மரங்கள் மட்டுமல்லாமல் எலுமிச்சை மரங்கள் மற்றும் திராட்சை கொடிகளும் இருந்தன,” என்று அவர் கடந்த கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.

இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) எங்களை இணக்கமாக்குவதற்காக எங்கள் தண்ணீரைத் துண்டித்தபோது, ​​​​எங்கள் 3,000 மரங்கள் இறந்து விட்டது. அப்போது நாங்கள் ‘அது மோசமடையாது’ என்று நினைத்தோம். ஆனால் இந்த ஆண்டு எங்களுக்கு தண்ணீர் இல்லாததால் மேலும் 3,000 மரங்கள் வாடி இறந்துவிட்டன, “என்று அலஹ்ரி விளக்குகிறார் .

சிரியாவின் மிகப்பெரிய நதியான யூப்ரடீஸில் உள்ள தப்கா அணையிலிருந்து வெறும் 3 கிலோமீட்டர் (1.8 மைல்) தொலைவில், அலஹ்ரியோடு 1,000 மக்கள் வசிக்கும் கிராமமான அயித் சாகிர் இருக்கிறது.

தப்கா அணையின் வறண்ட படுகையின் விளிம்பு, அசாத் ஏரியின் நீர்மட்டம் எவ்வளவு குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

2020 முதல், நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் ஆறு மீட்டர் குறைந்துள்ளது. யூப்ரடீஸ் நதி மிகவும் குறைவாக இருப்பதால், சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் வயல்களுக்கு வழங்க வேண்டிய நீரேற்று நிலையங்களை இனி நதி நீர் அடைய முடியாது.

2021 ஆம் ஆண்டில் யூப்ரடீஸ் நதிக்கரையில் உள்ள சுமார் 200 குழாய்களில் மூன்றில் ஒரு பங்கு குறைந்த நீர் மட்டத்தால் பாதிக்கப்பட்டது மற்றும் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இப்பகுதியில் போதுமான அளவு தண்ணீர் இல்லை என்று ஐ.நா தரவுகள் தெரிவிக்கின்றன .

தண்ணீர் நெருக்கடிக்கு காரணம் என்ன?

உலகளாவிய ரீதியில், காலநிலை நெருக்கடியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிராந்தியங்களில் ஒன்றாக மத்திய கிழக்கு உள்ளது . சிரியாவில் 2020-2021 மழைக்காலம் என்பது குளிர்காலத்தில் இரண்டு மாதங்கள் தாமதமாகத் தொடங்கி, வழக்கத்தை விட இரண்டு மாதங்களுக்கு முன்னதாக முடிவடைந்தது என்று ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) தெரிவித்துள்ளது. கூடுதலாக, ஏப்ரல் மாதத்தில் கடுமையான வெப்பம் பல இடங்களில் அறுவடையை பாதித்தது. பின்னர், இந்த கோடையில், சிரியா 70 ஆண்டுகளில் இல்லாத மோசமான வறட்சியை சந்தித்தது என்று மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு சிரியா முழுவதும் வயல் பயிர்களில் குறைந்தது 75% மற்றும் நீர்ப்பாசனப் பயிர்களில் 25% வரை இழப்பு ஏற்படும் என்று ஐ.நா நிறுவனம் எதிர்பார்க்கிறது.

துருக்கியில் இருந்து சிரியாவிற்கு வரும் யூப்ரடீஸில் இருந்து நீர் குறைக்கப்பட்டதால் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

“யூப்ரடீஸ் நதியில் இருந்து போதிய அளவு தண்ணீர் வராதது மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிரியாவில் குறைந்தபட்சம் டெய்ர்-எஸ்-சோர், ரக்கா மற்றும் அலெப்போ போன்ற மூன்று அரசு மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது என்று சிரியாவில் உள்ள ஐ.நா குழந்தைகள் நிதியமான யுனிசெப்பின் பிரதிநிதி போ கூறினார். மேலும் “கூடிய விரைவில் தீர்வு காண, பிராந்திய மட்டத்தில் எங்களுக்கு அவசரமாக ஒரு உரையாடல் தேவை” என்று கூறினார்.

கடுமையான வறட்சிக்குப் பிறகு, ஒரு காலத்தில் முக்கியமான நீர்த்தேக்கமாக இருந்த மேற்கு ஏரியில் அதிகம் எஞ்சியிருக்கவில்லை.

யூப்ரடீஸ் துருக்கி, சிரியா மற்றும் ஈராக் வழியாக பாய்கிறது. துருக்கியின் பக்கத்தில் அட்டதுர்க் அணை உள்ளது. 1987 ஆம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு, ஆண்டுக்கு சராசரியாக 500 கன மீட்டர் யூப்ரடீஸ் நீர் சிரியா வழியாக செல்ல அனுமதிக்க துருக்கி உறுதியளித்தது. ஆனால் இந்த கோடையில் அது வினாடிக்கு 215 கன மீட்டராக குறைந்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவின் நீர் பகிர்மானம் :-

விவசாயி அஹ்மத் மஹ்மூத் அலாஹ்ரி இந்த நிலைமைக்கு துருக்கியை முதன்மை காரணமாக கருதுகிறார். “துருக்கி எங்களை வறண்டு போக விரும்புகிறது, துருக்கிக்கும் ஐஎஸ்ஸுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை,” என்று அவர் கூறினார்.

குர்திஷ் தலைமையிலான கூட்டணியான சிரிய ஜனநாயகப் படைகள் (SDF) 2017 இல் அவர்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கு முன்பு, ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக, அயித் சாகிர் கிராமத்தில் இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படுபவரின் ஆதிக்கம் இருந்தது.

அப்போதிருந்து, குர்திஷ் PYD கட்சியின் தலைமையின் கீழ் இப்பகுதி வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் தன்னாட்சி நிர்வாகமாக (AANES) கருதப்படுகிறது. PYD குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் PKK சிரியப் பிரிவாக இருப்பதாக துருக்கி குற்றம் சாட்டுகிறது மற்றும் அதை ஒரு பயங்கரவாத அமைப்பாக எதிர்த்துப் போராடுகிறது.

சைக்கிள் பாதையாக மாறிப்போன ஆற்றுப்படுகை :-

வறண்ட ஆற்றுப்படுகை இன்று மோட்டார் சைக்கிள் பாதையாக பயன்படுத்தப்படுகிறது. இப்போது வறண்டு கிடக்கும் கபூர், ஒரு காலத்தில் யூப்ரடீஸ் நதியின் மிகப்பெரிய துணை நதியாக இருந்தது

அலாஹ்ரியைப் போலவே, அயித் சாகிரில் உள்ள பலர் துருக்கி வேண்டுமென்றே தண்ணீரைத் தடுப்பதாக நம்புகிறார்கள். ஆனால் அதை நிரூபிக்க முடியாது என்று ஐ.நா. பிரதிநிதி நைலுண்ட் கூறினார்: “நீர் மிகவும் குறைந்துள்ளது என்பதை நாங்கள் காண்கிறோம், ஆனால் நீர் மட்டம் ஏன் மிகவும் குறைவாக உள்ளது என்பதை நாம் மேலும் பகுப்பாய்வு செய்ய வேண்டும்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *