வேலூரில் உள்ள பிரபல நகை கடையில் 15 கிலோ தங்க, வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூர், ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.
வேலூர் தோட்டப்பாளையத்தில் பிரபல நகைக்கடை உள்ளது. நேற்று காலை ஊழியர்கள் கடையை திறந்தபோது நகைகள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடையின் பின் பகுதியில் உள்ள சுவரில் துளையிட்ட கொள்ளை கும்பல் உள்ளே புகுந்து சுமார் 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடையில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மீது கொள்ளையர்கள் பெயின்டை பூசியுள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க ஏஎஸ்பி, டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் மோப்ப நாய் கொண்டு விசாரணை நடத்தியதில் சில தடயங்கள், தகவல்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து கொள்ளையர்களை தேடி தனிப்படையினர் பெங்களூர், ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை உயர்அதிகாரிகள் கூறியதாவது: நகைக்கடை கொள்ளையில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை ஓரளவுக்கு அடையாளம் கண்டுள்ளோம்.
இதேபோல தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நடந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பட்டியலை எடுத்துள்ளோம். 4 தனிப்படைகளில் ஒன்று ஆந்திராவுக்கும், மற்றொரு தனிப்படை பெங்களூருக்கும் சென்றுள்ளது. அவர்களுக்கு சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். கொள்ளை சம்பவத்திற்கும், ஊழியர்களுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.