அசாம் மாநிலத்தில் குறிப்பிட்ட ஒரு வகை தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வரை ஏலம் விடப்பட்டு விற்கப்பட்டுள்ளது.
புத்துணர்ச்சி பாணங்களில் ஒன்றாக உலக அளவில் டீ முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் க்ரீன், ஒயிட் என சில வகை தேயிலைகள் மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படுகின்றன.

இந்தியாவில் விளைவிக்கப்படும் தேயிலைகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வருவது மூன்றாம் ரக தேயிலை மடும் தான். முதல் இரண்டு தரம் எக்ஸ்போர்ட்டுக்கு சென்று விடும். அந்த அளவுக்கு இந்திய தேயிலையை வெளிநாட்டினர் சுவைத்து பருகி வருகின்றனர். இந்நிலையில் அசாம் மாநிலத்தின் டீ கிலோ ஒன்றுக்கு ரூ.1லட்சம் வரை ஏலம் விடப்பட்டுள்ளது.
அசாமில் மனோகரி தேயிலைத் தோட்டத்தில் விளைவிக்கப்பட்டு கையால் தயாரிக்கப்பட்ட ஒரு கிலோ பராம்பரிய ‘மனோகரி கோல்ட்’ தேயிலைத் தூள் நேற்று கவுகாத்தியில் உள்ள திப்ரூகாரில் தேயிலை விற்பனை மையத்துக்கு கொண்டுவரப்பட்டது.
கடும் போட்டிக்கு இடையே அந்த தேயிலைத் தூள் 99 ஆயிரத்து 999 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த 2020 ஆம் ஆண்டு இதே தேயிலைத் தூள் ஒரு கிலோ 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகியிருந்தது. நாட்டிலேயே ஒரு கிலோ தேயிலை இவ்வளவு விலைக்கு ஏலம் விடப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
மனோகரி கோல்டு தேயிலை இவ்வளவு விலைக்கு ஏலம் போனதற்கான காரணம் அதன் தனித்தன்மை. மற்ற தேயிலை வகைகளைப் போல இது அதிக அளவில் கிடைப்பதில்லை. மனோகரி தேயிலைத் தோட்டத்தின் நிறுவனத்துக்குச் சொந்தக்காரரான ராஜன் லோஹியாவுக்கு மூன்று தேயிலைத் தோட்டங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து வருடத்துக்கு 25 லட்சம் கிலோ அளவுக்குத் தேயிலைத் தூள் கிடைக்கிறது. ஆனால் ‘மனோகரி கோல்டு’ எனப்படும் சிறப்பு வகை தேயிலை சில கிலோக்கள் மட்டும் கிடைக்கிறது. எனவே தான் இந்த தேயிலையை வாங்குவதில் இவ்வளவு போட்டி நிலவி வருகிறது.