

உக்ரைன் நாட்டில் போர் பதற்றம் நிலவியுள்ளதால் அந்நாட்டில் தங்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரஷ்யா – உக்ரைன் நாடுகள் இடையே நாளுக்கு நாள் போர்ச் சூழல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தியர்கள் யாரும் அவசியமின்றி உக்ரைனுக்கு செல்ல வேண்டாம்.உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்கள் இருப்பிடம் பற்றி தூதரகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். மேலும், உக்ரைனில் தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் இல்லாத மாணவர்கள் உட்பட அனைவரும் வெளியேற வேண்டும்’ என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனில் வசித்துவரும் அமெரிக்கர்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் உக்ரைனில் வசிக்கின்ற தங்கள் நாட்டு மக்களை அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
