மழை வரும் அறிகுறிகள் அதிகமானதால், சண்முகமும் பாண்டியனும் வேகவேகமாக நடந்துகொண்டே பேச ஆரம்பித்தனர்.
“என்ன சண்முகம்… எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று விட்டு அமித்ஷாவை பார்த்துவிட்டு வந்துள்ளார். என்னென்ன விசேஷங்கள் இருக்கின்றன?” என்று பாண்டியன் கொக்கியை போட்டார்.
சண்முகம் பதில் பேச ஆரம்பித்தார்.
“செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் சென்னையில் பேசினார் எடப்பாடி.
ஓபிஎஸ் டிடிவி சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் பேச்சே இல்லை என்று திட்டவட்டமாக பேசிய எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக உடைய ஆட்சியை காப்பாற்றியதே பாஜக தான் என பாஜகவுக்கு நன்றி சொன்னார்.
இந்த ஒரு சுமுகமான சூழ்நிலையில் மறுநாள் செப்டம்பர் 16ஆம் தேதி டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி துணை குடியரசு தலைவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த குறிப்பாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.
அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்களோடு சிபி ராஜா கிருஷ்ணன் வீட்டுக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமியை வரவேற்ற துணை குடியரசு தலைவர் அவர்களுக்கு மதிய விருந்து கொடுத்தார். சுமார் 2 மணி நேரம் எடப்பாடி மற்றும் அதிமுக நிர்வாகிகளோடு செலவிட்டார் சிபி ராதாகிருஷ்ணன்.
எடப்பாடி பழனிசாமி துணைக் குடியரசுத் தலைவரை சந்தித்து விட்டு சென்ற பிறகு, அவரை பாஜக தேசிய தலைவர் நட்டா நேரில் சென்று சந்தித்தார். இதன் மூலம் தமிழ்நாட்டு அரசியல் விவகாரங்களில் துணை குடியரசுத் தலைவர் சி பி இராதாகிருஷ்ணனிடமும் பாஜக மேலிடம் ஆலோசனைகள் கேட்கிறது என்பது உறுதியாகிறது.
அன்று இரவு 8 மணி அளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்துக்கு சென்றார் எடப்பாடி பழனிசாமி. முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளோடு அமித்ஷாவை சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் தமிழ்நாடு அரசியல் விவகாரம் பற்றி பேசினார் எடப்பாடி. அதன்பிறகு பத்து முதல் 15 நிமிடங்கள் வரை எடப்பாடியும் அமித்ஷாவும் மட்டும் தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த சந்திப்பின் விவரம் பற்றி எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட செய்தி குறிப்பில், ” மாண்புமிகு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து… தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத்திருமகனார் பசும்பொன் ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இந்திய திருநாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது வழங்கிட வேண்டும் என அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தினேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இங்கேதான் எடப்பாடி பழனிசாமியின் தெற்கு கேம் இருக்கிறது என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று சொல்பவர்கள் எல்லாம் டிடிவி ஓபிஎஸ் சசிகலா ஆகியோரை மீண்டும் இணைப்பதன் மூலம் அதிமுக இழந்த முக்குலத்து சமுதாய வாக்குகளை மீண்டும் பெறலாம் என யோசனை தெரிவிக்கிறார்கள்.
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் தினகரனும் ஓபிஎஸ் ம் பாஜக கூட்டணியில் நின்று கணிசமான வாக்குகளை பெற்றதையும் இதற்கு காரணமாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
டிடிவி தினகரன் ஓபிஎஸ் ஆகியோர் இல்லாமலேயே அதிமுகவுக்கு மீண்டும் முக்குலத்தோர் வாக்குகளை எப்படி வர வைப்பது என சில முக்கியமான நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.
அப்போதுதான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ரோடு இந்திய தேசிய ராணுவத்தில் இருந்தவர், சமூக விடுதலைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர் பாடுபட்டவர். தன்னுடைய சொத்துக்களை ஏழைகளுக்காக அள்ளிக் கொடுத்தவர். இப்படி நாடு மாநிலம் சமுதாயம் என அனைத்து நிலைகளிலும் மக்களுக்கு தொண்டாற்றிய பசும்பொன் தேவருக்கு இதுவரை பாரத ரத்னா விருது அளிக்கப்படவில்லை.
எனவே அதிமுக சார்பில் தேவருக்கு பாரத் ரத்னா விருது அளிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே பாரத ரத்னா விருது பசும்பொன் தேவருக்கு அளிக்கப்பட்டால்… அவர்கள் மீண்டும் அதிமுகவுக்கு உறுதியாக வாக்களிப்பார்கள்.
டிடிவி ஓபிஎஸ் ஆகியோர் தேவர் சமுதாயத்தின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்துகிறார்களே தவிர, ஆதாயம் பார்த்தார்களே தவிர அவர்களால் அந்த சமுதாயத்துக்கு எந்த பலனும் இல்லை. இந்நிலையில் அதிமுகவின் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா பரிந்துரைத்து பிரதமர் மோடி பசும்பொன் தேவருக்கு பாரத ரத்னா விருது அறிவித்தால் அது வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் மிக முக்கியமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எடப்பாடி தனது நிர்வாகிகளோடு ஆலோசித்து இருக்கிறார்.
இதன்மூலம் தான் முக்குலத்து மக்களுக்கு எதிரானவர் என்று கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை உடைக்க முடியும் என்று அழுத்தமாக நம்புகிறார் எடப்பாடி. இந்த அடிப்படையில் தான் உடனடியாக இதுகுறித்து மத்திய அரசிடமும் ஆலோசித்திருக்கிறார்கள். துணைக் குடியரசுத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணனிடமும் இது பற்றி ஆலோசித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இதற்குப் பிறகுதான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இந்த சந்திப்பின் அடையாளமாக தேவருக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை மனுவை தன்னுடைய கைப்பட எழுதி கையெழுத்திட்டு நேரடியாக அமித் ஷாவிடம் அளித்தார்.
இதை விவாதிக்க வேண்டிய ஊடகங்கள், எடப்பாடி பழனிசாமி அமித்ஷா வீட்டில் இருந்து வெளியே வரும்போது முகத்தை மூடிக்கொண்டு வந்தார் என ஒரு சில நொடிகள் வீடியோவை வைத்துக்கொண்டு விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
அமித்ஷாவும் பசும்பொன் தேவருக்கு பாரத ரத்னா விருது அளித்து விடலாம் என எடப்பாடியிடம் உத்தரவாதம் அளித்துள்ளார். எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் டிடிவி ஓபிஎஸ் ஆகியோரால் ஏற்படும் முக்குலத்தோர் வாக்கு இழப்பை பசும்பொன் தேவருக்கு பாரத ரத்னா விருது அளிப்பதன் மூலம் சரிகட்டி விட முடியும் என நம்பி அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி” என்று மூச்சுமுட்ட பேசி முடித்தார் சண்முகம்.
இதைக் கேட்ட பாண்டியன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னுடைய அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்க போகிறாராமே என்று அவராக ஒரு கேள்வியை எழுப்பி அவராகவே பதிலையும் கூற ஆரம்பித்தார்.
“பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனக்கு தேசிய அளவில் பதவி கொடுப்பார்கள் என்று காத்திருந்து காத்திருந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.
இதற்கிடையில் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து உருவாக்கிய அதிமுக பாஜக கூட்டணியை வெளிப்படையாக விமர்சிக்க ஆரம்பித்தார்.
செப்டம்பர் முதல் வாரம் கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் திமுக அரசுக்கு எதிராக மக்களின் மனநிலை இல்லை… ஆன்ட்டி இன்கம்பன்சி என்பதே தமிழ்நாட்டில் இப்போது இல்லை என அண்ணாமலை பேசினார். அமித்ஷா ஒவ்வொரு முறை தமிழ்நாடு வரும் போதும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசு தூக்கி எறியப்படும் என பேசி வரும் நிலையில் அதற்கு நேர் எதிராக பகிரங்கமாக அண்ணாமலை பேசியது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உளவுத்துறை ரிப்போர்ட் மூலமாக சென்றது.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் 2024 இல் இருந்து நீடித்து வந்த டிடிவி தினகரன் ஓபிஎஸ் ஆகியோர் கூட்டணியை விட்டு வெளியே போனதற்கு அண்ணாமலையும் ஒரு முக்கியமான காரணம் என்றும் அமித்ஷா சந்தேகப்பட்டார். இதையெல்லாம் வைத்து அண்ணாமலைக்கு எந்த உயர்வும் அளிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு பாஜக மேலிடம் வந்துவிட்டது.
செப்டம்பர் 16ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மையக்குழு கூட்டத்துக்காக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி எல் சந்தோஷ் சென்னை வந்திருந்தார். அவர் அண்ணாமலை வீட்டுக்கு சென்று டெங்குவால் பாதிக்கப்பட்ட அண்ணாமலையிடம் உடல் நலம் விசாரித்தார்.
அப்போது அவரிடம், “பாரதிய ஜனதா கட்சியில் என்றைக்கும் அமைப்பு முக்கியம். இங்கே தனி நபர்களை விட அமைப்புதான் முக்கியம்.. ஆனால் நீ அமைப்பை விட தனிநபர் தான் முக்கியம் என்ற ரீதியில் செயல்படுவதாக டெல்லி கருதுகிறது. உன்னை கடுமையாக எச்சரிக்கை சொல்லி இருக்கிறார்கள். அமைதியாக இரு இல்லையென்றால் உனக்கு ஆபத்து காத்திருக்கிறது என்று அண்ணாமலையின் வழிகாட்டியான பிஎல் சந்தோஷ் நேரடியாகவே அவரை எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் தான் அண்ணாமலை இனி பாஜகவில் இருந்து தனக்கு எவ்வித பயனும் இல்லை என்பதால் அதிலிருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பிக்கலாம் என்ற மூடுக்கு வந்து விட்டார் என்கிறார்கள்
இது தொடர்பாக தனக்கு நெருக்கமான சில பெருங்கோடீஸ்வரர்களிடமும், ஜோதிடர்களிடமும், நடிகர் ரஜினியிடமும் கூட அண்ணாமலை தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்” என்ற நியூஸ் கொடுத்துவிட்டு பாண்டியன் குடையை விரிக்க ஆரம்பித்து விட்டார்.
மழை பொழிய ஆரம்பித்தது
