• Sat. Apr 20th, 2024

தொலைநோக்கு இல்லாத பகல் கனவு பட்ஜெட் : அண்ணாமலை விமர்சனம்

தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இது குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அண்ணாமலை , தமிழக பாஜக தலைவர்

தமிழக அரசின் பட்ஜெட், தொலைநோக்கு திட்டம் எதுவும் இல்லாத ‘பகல் கனவு பட்ஜெட்டாக’ அமைந்திருக்கிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.தமிழக பட்ஜெட் தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில்1. மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது2. திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ‘இன்றும்’ நிறைவேற்றவில்லை3. தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத ‘பகல் கனவு பட்ஜெட்டாக’ அமைந்திருக்கிறது.6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியினை பயிலும் போது ரூ.1000 வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர்.
ஆனால் இது ‘பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல்’ செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சரத்குமார்,சமத்துவ மக்கள் கட்சி

மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவதற்கான அறிவிப்பு இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே வெளியிடாதது மக்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கும்.
நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் தமிழகத்திற்கு 14 -வது நிதிக்குழுவால் வழங்கப்பட்ட மானியங்களைக் காட்டிலும் குறைந்த அளவிலேயே 15 -வது நிதிக்குழு மானியம் அதிகரித்துள்ளது. மத்திய அரசு, பாரபட்சமின்றி மாநில அரசுடன் ஒத்துழைப்பு நல்கி செயல்பட்டால், தேச வளர்ச்சியும், மாநில வளர்ச்சியும் சிறப்பாக அமையும். வரவேற்கத்தக்க அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தாலும், அரசு மேலும் ரூ.90,116 கோடி அளவுக்கு நிகரக் கடன் பெற திட்டமிட்டு, 2023-இல் நிலுவைக் கடன் ரூ.6.53 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கும் என்பது வேதனைக்குரியது.
தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் வாயிலாக கடன் தொகையை குறைத்து, சாதாரண பட்ஜெட் அறிவிப்புகள் என்பதோடு நின்றுவிடாமல் பொருளாதார வளர்ச்சியை மென்மேலும் ஊக்குவித்து செயல்பட்டால் பாராட்டலாம்” என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

முத்தரசன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

நிதி நிர்வாகத்தில் மேற்கொண்ட முயற்சியில் வருவாய் பற்றாக்குறையை குறைத்திருப்பது நல்ல முன்னேற்றம் என்று தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
மாவட்டம் தோறும் புத்தகக் காட்சி, இலக்கியத் திருவிழா, ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் திறன் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கது என்றும் முத்தரசன் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *