• Fri. Apr 26th, 2024

மாமியார் வீட்டில் கூட இப்படி கவனிப்பில்லை ….ஜெயக்குமாருக்கு தினமும் திருச்சியில் கறிவிருந்து!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு திருச்சி மாவட்ட அதிமுக முக்கிய பிரமுகர்கள் பலர் தினமும் கறிவிருந்து வைத்து தங்கள் விருந்தோம்பலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நிபந்தனை ஜாமின் காரணமாக திருச்சியில் தங்கி வாரத்தின் மூன்று நாட்கள் கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார் ஜெயக்குமார்.
இந்நிலையில் அவருக்கு போட்டி போட்டு சிக்கன், மட்டன், மீன் என அசைவ உணவு வகைகளை தங்கள் வீடுகளில் சமைத்து எடுத்து வந்து கொடுக்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுக தொண்டர் ஒருவரை சட்டையை கழற்ற வைத்து கைகளை கட்டி ஊர்வலமாக அழைத்து சென்ற விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பல்வேறு கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியாக நிபந்தனையுடன் கூடிய ஜாமின் கிடைத்தது.

நீதிமன்ற நிபந்தனைப் படி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சியில் தங்கியிருந்து வாரத்தின் மூன்று நாட்கள், அதாவது திங்கள், புதன், வெள்ளிக்கிழமை ஆகிய 3 தினங்களில் கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல விடுதியில் தங்கியிருக்கும் அவரை திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் சென்னை உட்பட பல்வேறு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தினமும் சந்தித்து செல்கின்றனர்.

இதனிடையே திருச்சி மாவட்ட அதிமுக முக்கியப் பிரமுகர்களான முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வெல்லமண்டி நடராஜன், பரஞ்சோதி, முன்னாள் துணை மேயர் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் ஜெயக்குமாருக்கு தங்கள் விருந்தோம்பலை வெளிப்படுத்தும் விதமாக தினமும் வகை வகையாக அசைவ உணவுகளை தயாரித்து எடுத்து வந்து விருந்து கொடுத்து வருகின்றனர். திருச்சியில் தனக்கு இந்தளவுக்கு கட்சியினரிடம் இருந்து கவனிப்பு கிடைக்கும் என்பதை ஜெயக்குமாரே எதிர்பார்க்கவில்லையாம்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை பொறுத்தவரை அவர் ஒரு அசைவ பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மீன் வகை உணவுகளை அவர் அதிகம் விரும்பி சாப்பிடுவார் என்பதால் அவருக்கேற்றபடி மீன் வறுவல், மீன் குழம்பு என விருந்தில் பரிமாறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *