• Mon. Apr 29th, 2024

திருப்பரங்குன்றம் கோவிலில் விஷ்ணு சிலை விரிசல்..கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகம்..,போராட்டத்திற்குத் தயாராகும் பா.ஜ.க..!

திருப்பரங்குன்றம் கோவிலில் விஷ்ணு சிலையில் விரிசல் ஏற்பட்டு, அதை கோவில் நிர்வாகம் மறைத்து சிமெண்டால் பூசப்பட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி பா.ஜ.க.வின் கோபத்திற்கு உள்ளாகி இருக்கின்றது.
ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வரலாற்று சிறப்புமிக்க தலமாக விளங்கி வருகின்றது. இந்தக் கோவில் கருவறையில் முருகன், தெய்வானை திருமணக்கோலத்திலும், அருகில் பிரம்மதேவர், நாரதமுனிவர், சூரியன், சந்திரன் மற்றும் கந்தவர்கள், கற்பகவிநாயகர், அதில் மலையைத் தாங்கியவாறு ஆஞ்சநேயர், சங்கு சக்கரத்தோடு விஷ்ணு துர்க்கை, பவளக்கனிவாய் பெருமாள், உடன் மகாலக்ஷ்மி, சோமாஸ்கந்தர் என தனித்தனி சன்னதிகளாக 5 சன்னதிகள் ஒரே கருவறையில் உள்ளது.
திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணத்தை மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா நடத்தி வைத்தாதகவும், இந்த திருமணத்திற்கு முப்பத்திமுக்கோடி தேவர்களும், அனைத்து தெய்வங்களும் சாந்தஸ்ரூபமாகவும், மிகவும் சந்தோசமாகவும் கலந்து கொண்டதாக புரான வரலாறில் எழுதப்பட்ட உண்மையாகும். இதற்கு சாட்சியாக கோவிலில் இருக்கக்கூடிய ஆஸ்தான மண்டபத்தில் இருந்து கருவறை வரை ஒவ்வொரு தூண்களிலும் தெய்வங்களாக புன்னகையோடு இருக்கக்கூடிய காட்சிகளையும் நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். இப்படியிருக்க மூலஸ்தானத்தில் இருக்கக்கூடிய விஷ்ணு சிலை தலைப்பகுதி முழுவதும் சிதிலமடைந்திருக்கிறது. இதை மறைத்து கோவில் நிர்வாகம் சிமெண்ட் கலவையால் பூசியிருக்கின்றனர். இந்தச் சம்பவத்தால் தற்போது பக்தர்கள், இந்து அமைப்பினர்கள், பா.ஜ.க.வினர் மற்றும் திருப்பரங்குன்றம் வாசிகள் மத்தியிலும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இதனால் திமுக அரசுக்கு ஆபத்தா என பேச்சும் கிளம்பி இருக்கின்றது.

இந்த விவகாரம் குறித்து போராட்டத்திற்குத் தயாராகி வரும், இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் கே.பி.வேல்முருகனிடம் பேசினோம்..,
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ஒரு குடைவரை கோவில். இந்தக் கோவிலில் விஷ்ணு சிலை உடைந்த சம்பவம் எங்களை மட்டுமல்ல உலக மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. இதற்கு கோவில் இணை ஆணையர் சுரேஷ், கோவில் பட்டர்கள், கோவில் பணியாளர்கள் அனைவரும் தான் காரணம். கோவில் புராதன வரலாற்று சிலைகளை (தவறு சிலைகள் என்று சொல்லக்கூடாது, கடவுளாக பாக்க வேண்டுமே தவிர அவற்றை சிலைகளாகப் பார்க்கக் கூடாது). இங்கு இருக்கும் பணியாளர்களின் மெத்தனமான போக்கால் கோவில் பணிகளை மிக லேசாக செய்கின்றனர். இது வெட்கப்படக்கூடிய செயல். அதே சமயத்தில் கடினமாக கண்டிக்கக்கூடிய செயலும் ஆகும். கோவில் சிலைகளை தற்போது பராமரிக்க தவறிவிட்டனர். பொருளதாரத்தை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் கோவில் சொத்துக்களை கோவில் ஊழியர்கள் கொள்ளையடித்து வருகின்றதும், கோவில்களில் (திருப்பரங்குன்றம் மலையில்) ராட்சத ட்ரில் மிஷ்ன்களால் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி வாங்காமல் துளையிட்டதின் காரணமாகத்தான் விஷ்ணு சிலை உடைந்து இருக்கின்றது. இது திமுக அரசுக்கு மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும். இந்த சம்பவம் எங்களை அதிர்ச்சி அடைய வைக்கின்றது. இதை எங்கள் அணியின் சார்பில் மிக வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கான போராட்டத்தை மேலிடத்தில் அனுமதி பெற்று திருப்பரங்குன்றம் மக்களை ஒன்றுதிரட்டி, ஒரு கை பார்க்காமல் விடமாட்டோம். கோவில் அலுவலகத்தை முற்றுகையிட தயாராக உள்ளோம் என்றார் வேல்முருகன் ஆவேசமாக.
இது குறித்து முதல் ஸ்தானிகர் பட்டரில் ஒருவரான நீலகண்டனிடமும், கோவில் மூலஸ்தானம் பணியாளர் முத்துவேலிடமும் பேசினோம்..,
விஷ்ணு சிலை உடைஞ்சு போச்சு நாங்க என்ன செய்ய முடியும். கோவில் நிர்வாகம் சிமெண்ட் வைச்சு பூசிட்டாங்க. அவ்வளவுதான் எங்களுக்கு தெரியும். இதை பெரிசு படுத்தாதிங்க அண்ணா…….
மேலும், இதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோவில் இணை ஆணையர் சுரேஷிடம்   பேசினோம்..,
விஷ்ணு சிலையில் லேசான வெடிப்புதான் ஏற்பட்டிருக்கிறது. நான் இன்னும் நேரடியாக சென்று பார்க்கவில்லை. வெப்பம் தாங்காமல் வெடிச்சுருச்சு, அதை சிமெண்ட் கலவையால் உடனே சரிபண்ணிட்டோமே என்றார் கூலாக. இந்து சமயத்துறை ஆணையத்த்திடமும், தொல்லியல் துறைக்கும் இந்த சம்பவத்தை எழுத்துப்பூர்வமாகத் தெரியப்படுத்திவிட்டீர்களா? என்ற கேள்வியை நாம் முன் வைத்தோம். அதற்கு பதில் அளித்த சுரேஷ்;, 
இது சாதாரண விஷயம். என் அதிகாரத்துக்கு உட்பட்டதுதான். நான் சபதியிடம் சொல்லி சரி செய்து விட்டேன். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும் என்றார் படபடப்பாக. 
எது எப்படியோ விஷ்ணு சிலை உடைந்த சம்பவத்தாலும், கோவில் நிர்வாகம் செய்த தவறாலும் திமுக அரசுக்கு ஆபத்து என்ற விமர்சனங்களும் பக்தர்கள் மத்தியில் கிளம்பி இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *