மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை குறித்த முதல் அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. அதிரடி பேட்ஸ்மேன் எனப் பெயர் எடுத்த இவர், பள்ளி கால நண்பரான சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து அடித்த 664 ரன்கள் பார்ட்னர்ஷிப் அவரை கிரிக்கெட் உலகில் பிரபலப்படுத்தியது. ஆஸ்திரேலியாவின் அச்சமூட்டும் பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவின் ஒரே ஓவரில் 22 ரன்கள் குவித்து அசத்தியவர் காம்ப்ளி. 1993-2000-ம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவுக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் வினோத் காம்ப்ளி விளையாடி உள்ளார். அவர் மீது போதைப்பழக்கம், ஒழுக்கமின்மை உள்பட பல்வேறு புகார்கள் கிளம்பின. இதனால் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து அவர் ஓரங்கப்பட்டார்.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2009ஆம் ஆண்டு காம்ப்ளி அறிவித்தார். மதுப்பழக்கம் காரணமாக அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. இந்த நிலையில், மும்பையில் உள்ள தானே அக்ருதி மருத்துவமனையில் சனிக்கிழமையன்று வினோத் காம்ப்ளி அனுமதிக்கப்பட்டார். அவரது மூளையில் ரத்தக்கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என நேற்று தகவல்கள் வெளியானது. மருத்துவமனையில் இருந்து வினோத் காம்ப்ளி வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்களின் தொடர்ச்சியான மற்றும் இடைவிடாத ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.








