• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

ஆளுநருக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிட்ட கிராம மக்கள்

ByA.Tamilselvan

Jul 17, 2022

புதுச்சேரியில் ஆளுநர் வருகையை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதுச்சேரி அருகே துத்திப்பட்டு பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கிரிக்கெட் மைதானம் உள்ளது. இங்கு அரசுக்கு சொந்தமான ஏரி மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து மைதானம் கட்டியுள்ளதாக பிரச்சினை எழுந்தது. மைதானத்தை சுற்றி மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களால் விவசாய நிலங்களுக்கு கூட செல்ல முடியவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
பிறகு அப்போதைய ஆளுநர் கிரண்பேடி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் அவரது உத்தரவு கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
இது குறித்து தற்போதைய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கவனத்துக்கு எடுத்து சென்ற நிலையில், அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்தில் சினிமா மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் பங்கேற்கும் 2 நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க ஆளுநர் தமிழிசை வருகைதர இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆளுநரின் வருகையை கண்டிக்கும் விதமாக தங்கள் வீடுகளின் முன்பு கருப்பு கொடிகளை கட்டியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.