• Fri. Apr 26th, 2024

இன்று முதல் மயான கட்டணம் உள்ளிட்ட விலை உயரும் பொருட்கள்

ByA.Tamilselvan

Jul 18, 2022

கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட வரிகளின் படி இன்று முதல் மயானக்கட்டணம் முதல் அரிசி உள்ளிட்ட பொருட்கள் விலை உயருகின்றன.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. விதிக்க முடிவு செய்யப்பட்டது. அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன.
இதில் முக்கியமாக பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மற்றும் லேபிள் ஒட்டி விற்கப்படும் இறைச்சி (உறைந்தது தவிர), மீன், பன்னீர், தேன், உலர்ந்த காய்கறிகள், உலர்ந்த மக்கானா, கோதுமை மாவு மற்றும் பிற தானியங்கள், தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் ஆகியவற்றுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு உள்ளது. வெட்டுகத்தி, பேப்பர் கத்தி, பென்சில் ஷார்ப்னர், கரண்டி, முட்கரண்டி, ஸ்கிம்மர், கேக்-சர்வர், எல்.இ.டி. விளக்குகள், மை, வரையும் கருவிகள் போன்ற பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. 12-ல் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதைப்போல தூய்மை எந்திரம், வரிசைப்படுத்தல் அல்லது தரம் பிரித்தல் எந்திரம், விதை, தானிய பருப்பு வகைகள், அரவை எந்திரம், பவன் சக்கி மற்றும் வெட் கிரைண்டர் ஆகியவற்றின் வரியும் 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயருகிறது. சோலார் வாட்டர் ஹீட்டருக்கு 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக வரி உயர்த்தப்படுகிறது. வங்கி காசோலைகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு உள்ளது. இவை தவிர வரைபடங்கள், ஹைட்ரோகிராபிக் அல்லது அதையொத்த வரைபடங்கள், உலக வரைபடங்கள், சுவர் வரைபடங்கள், நிலப்பரப்புத் திட்டங்கள் மற்றும் உலக உருண்டைகள் உள்பட அனைத்து வகையான விளக்கப்படங்களுக்கும் 12 சதவீத ஜி.எஸ்.டி. அமலாகிறது.
மேலும் நாள் ஒன்றுக்கு ரூ.1,000 வரையிலான ஓட்டல் அறை வாடகைக்கு 12 சதவீதமும், நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆஸ்பத்திரி அறை (தீவிர சிகிச்சை பிரிவு தவிர்த்து) வாடகைக்கு 5 சதவீதமும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு வசதிகளுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. சாலைகள், பாலங்கள், ரெயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சுடுகாடுகளுக்கான பணி ஒப்பந்தங்களுக்கும் 12-ல் இருந்து 18 சதவீதமாக வரி அதிகரிக்கும். அதேநேரம், பேட்டரி பேக் பொருத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும் மின்சார வாகனங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. சலுகை அளிக்கப்படுகிறது. மேலும் எரிபொருள் விலையை உள்ளடக்கிய லாரி மற்றும் சரக்கு வண்டிகளின் வாடகை 18-ல் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இவற்றை தவிர மேலும் பல்வேறு விதமான மாற்றியமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதங்களும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *