தமிழகத்தில் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் அதாவது நான்காம் நிலைக்கு இணையாக டி கிரேடு ஊதியம் வழங்காத வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் மாநில சங்க மாநில பொதுச் செயலாளர் முருகன் அறிவித்தார்.

அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆறாவது நாளாக கிராம உதவியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நான்காம் நிலைக்கு இணையான டி கிரேடு ஊதியம் வழங்கப்பட வேண்டும். கிராம உதவியாளர்கள் வாரிசுகளுக்கு 25 சதவீத கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். அரசு ஆணை எண் 20ல் திருத்தம் செய்து கருணை அடிப்படையில் கல்வித் தகுதிக்கேற்றார் போல் தகுந்த பணியை வழங்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம உதவியாளர் பணியை துணை கிராம நிர்வாக அலுவலர் என பதவியின் தரம் உயர்த்திடவும், கூடுதல் பணி பொறுப்புகளை அளிக்கவும் வேண்டும். கிராம உதவியாளர் களுக்கு பதவி உயர்வில் 10 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். கிராம உதவியாளர் நிலையில் இருந்து கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு பெற்ற அலுவலர்களுக்கு பணிக் காலத்தை முழுமையாக சேர்த்து ஓய்வூதியம், பணிக்கொடை கணக்கிட்டு வழங்க வேண்டும். கிராம உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கும், பணியில் இருந்து இறந்து விட்ட கிராம உதவியாளர்களுக்கும் சி.பி.எஸ்.ல் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
முக்கிய கோரிக்கையான நான்காம் நிலைக்கு இணையான டி பிரிவு ஊதியம் பெறுவது பற்றி முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆறாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களது கோரிக்கைகளை ஏற்று அரசு நடைமுறை படுத்தும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.










