• Mon. Mar 24th, 2025

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் நலமுடன் இருக்கிறார்- விஜய் யேசுதாஸ் தகவல்

ByP.Kavitha Kumar

Feb 27, 2025

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுத்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ், கடந்த 60 ஆண்டுகளாக தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை யேசுதாஸ் பாடியுள்ளார். இவர் 8 தேசிய விருதுகள் மற்றும் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்க மாநில அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். அவருக்கு 1975-ல் பத்மஸ்ரீ, 2002ல் பத்ம பூஷண் மற்றும் 2017-ல் பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், யேசுதாஸுக்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு ரத்த வெள்ளை அணுக்கள் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தகவல் வெளியானது. இதையடுத்து யேசுதாஸ் விரைவில் நலமடைய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலர் பதிவிடத் தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலை குறித்து வெளியான தகவலுக்கு அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது தந்தை யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை. அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் அமெரிக்காவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 10-ம் தேதி அன்று யேசுதாஸ் தனது 85வது பிறந்தநாளைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.