கோவை தடாகம் அடுத்த பன்னிமடை பகுதியில் உள்ள தோட்டத்தில் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, அங்கிருந்த மரங்களை முறித்து சேதப்படுத்தியுள்ளது. தோட்டத்தில் காட்டு யானை சுற்றித்திரியும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களையும் மரங்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், தடாகம் அடுத்த பன்னிமடை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்குள் இரவு நேரத்தில் ஒற்றைக் காட்டு யானை புகுந்துள்ளது. அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் தென்னை மரங்களை முறித்து சேதப்படுத்திய அந்த யானை, தோட்டத்தில் சிறிது நேரம் சுற்றித்திரிந்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளது.
இதற்கிடையே, தோட்டத்திற்குள் ஒற்றைக் காட்டு யானை நடமாடிய காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளன.

வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


