• Thu. May 9th, 2024

நீர்நிலைக்கு அருகே இருக்கும் சென்னைவாசிகளே உஷார்… அபராதத்துடன் வருது அதிரடி நடவடிக்கை!..

By

Aug 20, 2021

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பருவமழைக் காலத்துக்கு முன்னதாகவே பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இந்த நீர்வழிக் கால்வாய்களில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள், வண்டல்கள் மற்றும் குப்பைகள் ஆகியவை நவீன இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டு, தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின்படி அமைக்கப்பட்ட கூட்டுக் குழுவின் கள ஆய்வு அறிக்கையில் பெருங்குடி ஏரியிலும், ஏரியைச் சுற்றிலும் குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகளைப் போடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், திடக்கழிவு மேலாண்மை விதி 2016-ன் கீழ் அபராதம் விதிக்குமாறும் பரிந்துரைத்தது.

அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களால் 18.08.2021 மற்றும் 19.08.2021 அன்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பெருங்குடி ஏரி மற்றும் அதனைச் சுற்றிலும் குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகளைக் கொட்டிய 21 நபர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். அதுமட்டுமின்றி மாநகராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைகள் மற்றும் நீர்வழித் தடங்களில் பொதுமக்கள் குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகளைக் கொட்டக் கூடாது என்றும், மீறினால் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *