நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், ஆட்சியதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் திமுகவும், பணபலம் கொண்ட அதிமுகவும் தேர்தல் ஜனநாயகத்தை தமிழகத்தில் கேலிக்கூத்தாக்கி விட்டன. அனைத்து வார்டுகளிலும் பணமும் பரிசுப் பொருட்களும் வினியோகம் ஆனது. வெளியூரில் இருக்கும் வாக்காளர்கள் பணமளித்து வரவழைக்கப்பட்டார்கள். வேட்பாளர்கள் மிரட்டப்பட்டார்கள்.

பிரசாரத்திற்குச் செல்கையில் அடித்து விரட்டப்பட்டார்கள். தேர்தல் நாளில் வாக்குச் சாவடியிலே பணம் வினியோகம் செய்யப்பட்டது. உச்சகட்ட அநீதியாக வாக்குச்சாவடிகளின் கதவுகளைப் பூட்டிக்கொண்டு கள்ள ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் இச்செயல்களை தேர்தல் அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை.
தங்கள் வாக்கைப் பதிவு செய்யவந்த மாற்றுகட்சி வேட்பாளர்களை வாக்காளர்கள் என நினைத்து பணம் கொடுக்க முயன்றது அவல நகைச்சுவை. உள்ளாட்சிப் பதவிகளைக் கைப்பற்றி மக்கள் பணத்தை துளி விடாமல் உறிஞ்சுவிடத் துடிக்கும் கழகங்களில் ஊழல்வெறிக்கு ஜனநாயகம் பலியாகியுள்ளது. தேர்தல் அத்துமீறல்களை மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயமானதாக இருக்க முடியும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.




