• Fri. Apr 19th, 2024

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று வெளியீடு?

தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்.

கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கக் கோரிய வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரண்டாவது அலை அளவுக்கு தற்போது நிலவரம் மோசமாக இல்லை என்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடலாம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை தான் மனுதாரர்கள் அணுக வேண்டும் என்றும் தெரிவித்தனர்.அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள்மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

மேலும், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் போது வேட்பாளருடன் 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தனர். கொரோனா தடுப்பு விதிமுறைகளை அனைத்து கட்சிகளும் பின்பற்றுவதை மாநில தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் எனவும், விதிமீறல் இருந்தால் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தேர்தல் நடத்துவதற்கான தடை எதுவும் இல்லாததால், உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசம் இன்றுடன் நிறைவும் அடைவதால் இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் இன்று வரும் என தகவல் வெளியாகியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *