• Sun. May 5th, 2024

சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் : தரிசன நேரம் நீட்டிப்பு..!

Byவிஷா

Dec 11, 2023

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் மண்டல மகரவிளக்கு பூஜையைக் காண லட்சக்கணக்கில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிவது வழக்கம். நடப்பாண்டில் தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து முன்பதிவு செய்த பக்தர்கள் எண்ணிக்கை பெருகி வருகிறது. தற்சமயம் தினசரி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் செய்கின்றனர். இந்த எண்ணிக்கை சில நாட்களில் 1லட்சத்து 25000க்கும் அதிகமாக பதிவாகிறது. இதனால் சபரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வரக் கூடிய பக்தர்கள் குறிப்பாக முதியவர்கள் குழந்தைகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனையடுத்து குழந்தைகள் , முதியவர்களுக்கு தனி வரிசை திருப்பதி போல் அறைகளில் தங்க வைத்து தரிசனம் என தேவசம்போர்டு பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
தற்போது சபரிமலையில் அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து பகல் ஒரு மணி வரை திறந்திருக்கும் . பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறந்து இரவு 11 மணி வரை மொத்தம் 17 மணி நேரம் நடை திறக்கப்பட்டு இருக்கும். பக்தர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு சபரிமலையில் தரிசன நேரத்தை அதிகப்படுத்த தேவசம்போர்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. அதன்படி மாலை ஒரு மணி நேரம் அதாவது 3 மணிக்கே நடை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்றிலிருந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குழந்தைகள் முதியவர்கள் உடல் ஊனமுற்றோர் இவர்களுக்கு தனி வரிசையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்களின் சிரமங்களை ஓரளவுக்கு குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 27ம் தேதி சபரிமலையில் மண்டல பூஜை நடைபெற உள்ளது. அன்றைய தினம் மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும். மீண்டும் டிசம்பர் 30ம் தேதி விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு ஜனவரி 20ம் தேதி நடை அடைக்கப்படும். 2024 ஜனவரி 15ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இந்நிலையில் மகர விளக்கு கால பூஜைக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வழக்கம் போல சபரிமலையின் http://www.sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *