• Sat. Oct 12th, 2024

போரில் உக்ரைன் வெற்றி பெறும் – இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை

உக்ரைன் நாடாளுமன்றத்தில் காணொலி காட்சி மூலம் பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.போரிஸ் ஜான்சனின் இந்த உரையில், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின், ரஷ்யாவை வெல்லமுடியாது என்ற கட்டுக்கதையை உடைத்தெறிந்த உக்ரைன் நாட்டின் துணிச்சலுக்கு வணக்கம். இன்று உங்களுக்கு ஒரு செய்தி உள்ளது: உக்ரைன் வெல்லும், உக்ரைன் சுதந்திரமாக இருக்கும். இது உக்ரைனின் மிகச்சிறந்த மணிநேரம், இது வரும் தலைமுறைகளுக்கு நினைவுகூரப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “நீண்ட கால இலக்கை அடையும் வரை உக்ரைனுக்கு அதன் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து, ஆயுதங்கள், நிதியுதவி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவோம். இனி யாரும் உங்களைத் தாக்கத் துணிய மாட்டார்கள்” எனக் கூறினார். இந்த கூட்டத்தில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, பிரிட்டனும் உக்ரைனும் இப்போது “சகோதர சகோதரிகள்” என்று கூறி ஜான்சனுக்கு நன்றி தெரிவித்தார்.

பிப்ரவரி 24 அன்று ரஷ்யப் படைகள் உக்ரைனை தாக்க தொடங்கிய பின்னர், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் மேற்கத்திய தலைவர் போரிஸ் ஜான்சன் ஆவார். இந்த போர் தொடங்கியதிலிருந்து பிரிட்டிஷ் பிரதமர் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். மேலும், தற்போது உக்ரைனுக்கு நிவாரணமாக, போரிஸ் ஜான்சன் 300 மில்லியன் பவுண்டுகள் ($375 மில்லியன்) ராணுவ உதவியையும் அறிவித்தார். இதில் மின்னணு போர் உபகரணங்கள் மற்றும் பேட்டரி ரேடார் அமைப்புகளும் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *