• Tue. Mar 19th, 2024

உக்ரைன்- ரஷ்யா போர் நடவடிக்கை : சர்வதேச நீதிமன்றத்தை நாடிய உக்ரைன்

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வில் ரஷிய படைகளுக்கும் அந்நாட்டு படைகளுக்கும் இடையே கடும் சண்டை நிகழ்ந்துவருகிறது.
மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தைக்கு தயார் என இரண்டு தரப்பும் தெரிவித்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 2 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

போர், நான்காம் நாளை எட்டியுள்ள நிலையில், ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளது உக்ரைன். நாட்டின் முக்கிய நகரங்களில் பீரங்கி மற்றும் கப்பல் ஏவுகணைகளை கொண்டு ரஷியா தாக்குதல் நடத்திவரும் நிலையில், சர்வதேச நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளது உக்ரைன்.

உக்ரைன் அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பெலாரஸில் உள்ள கோமலுக்கு ரஷிய குழு சென்றுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. ஆனால், பெலாரஸ் அரசும் ரஷியா படையெடுக்க உதவியுள்ளதால் அங்கு பேச்சுவார்த்தைக்கு வர முடியாது என உக்ரைன் அதிபர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

ஆனால், மற்ற இடங்களில் பேச்சுவார்த்தை நடக்கும் பட்சத்தில் அதில் கலந்து கொள்வதில் எந்த பிரச்னையும் இல்லை என உக்ரைன் தரப்பு கூறியுள்ளது. வார்சா, பிராட்டிஸ்லாவா, புடாபெஸ்ட், இஸ்தான்புல், பாகு ஆகிய இடங்களை பேச்சுவார்த்தைக்காக பரிந்துரைத்துள்ளோம் என உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *