ஆகஸ்ட் 11-ம் தேதி ஆமீர்கான் நடித்துள்ள ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்தப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதில், ஆமீர்கான், நாகா சைதன்யா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”நான் ஆமீர்கானின் மிகப்பெரிய ரசிகன். அவரது படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவது எனக்கு பெரும் மகிழ்ச்சி. நிறைய படங்களை நாமே ரீலிஸ் செய்கிறோமே கொஞ்சம் இடைவெளி விடலாம் என்று நினைத்தேன். அப்போது தான் ‘லால் சிங் சத்தா’வை ரிலீஸ் செய்ய என்னை தொடர்பு கொள்ள உள்ளதாக தகவல் அறிந்தேன்.

வேண்டாம் இந்தி படத்தையாவது விட்டு வைப்போம் என நினைத்திருந்தேன். திடீரென்று ஒருநாள் கால் வந்தது. அதுவும் ஆமீர்கானே நேரடியாக வீடியோ காலில் பேசினார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர் கேட்டவுடன் நான் ஓகே சொல்லிவிட்டேன். பிறகு படத்தைப் பார்த்தேன். படம் சிறப்பாக வந்ததுள்ளது. ஆமீர்கான் மீண்டும் தன்னை உலக சினிமாவில் சிறந்த நடிகராக நிரூபித்துள்ளார்.

அவர் 30 ஆண்டுகளாக பான் இந்தியா நட்சத்திரமாக ஜொலித்துவருகிறார். தமிழ் மக்கள் படத்தை கண்டிப்பாக கொண்டாடுவார்கள்” என்றவரிடம்
பத்திரிகையாளர் ஒருவர், இந்தி எதிர்ப்பை பதிவு செய்யும் தமிழகத்தில் இந்தி படத்தை வெளியீடுவதால் வரும் எதிர்கருத்துகளை எப்படி எதிர்கொள்வீர்கள்’ என கேட்டதற்கு, உதயநிதி ஸ்டாலின் எப்போதும் ‘இந்தி தெரியாது போடா என்பது இந்தி திணிப்புக்கு எதிரானது தான்மொழியைக் கற்றுக்கொள்ளக்கூடாது என எப்போதும் நாம் சொன்னது கிடையாது. உங்களுக்குத் தேவைப்பட்டால் நீங்கள் கற்றுகொள்ளலாம். ஆனால், நீங்கள் கற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என யாராவது திணித்தால் அதை எதிர்க்க வேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கை.

இது ரெட் ஜெயண்டின் முதல் இந்தி படம். தெலுங்கு படத்தை வெளியிட்டிருக்கிறோம். மொழியைத் தாண்டி, எனக்கு ஆமீர்கானின் நடிப்பு மிகவும் பிடிக்கும்.அவரின் எல்லா படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் இந்திய வரலாறு நிறைய இருக்கிறது. அது தொடர்பாக நானும், ஆமீர்கானும் நிறைய பேசினோம். இது ஒரு ஃபேன் பாய் தருணமாக கூட நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்” என்றார்.
