• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கட்சிக் கொடிகளையும், அபாயகரமான முறையில் பிளக்ஸ் பேனர்களையும் வைத்துள்ள தவெகவினர்..,

BySeenu

Aug 23, 2026

கோவையில் தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும் நிலையில், குறுகலான சிங்காநல்லூர் சாலையில் தவெகவினர் கட்சிக் கொடிகளையும், அபாயகரமான முறையில் பிளக்ஸ் பேனர்களையும் வைத்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏறனவே கோவையில் அதிமுகவினர் வைத்த கட்சிக்கொடிக்கம்பத்தால் பெண் ஒருவர் நிரந்தர ஊனமுற்ற சூழலில், “இதுதான் மக்கள் எதிர்பார்த்த மாற்றமா?” என்று வாகன ஓட்டிகள் தலையில் அடித்தபடி வாகனங்களை ஓட்டிச் சென்று வருகின்றனர்.

சாலை ஓரங்களில் கட்சிக் கொடிகளை நடுவதால் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்சிக் கொடிகளை நடவு செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சூழலில், சிங்காநல்லூர் பகுதியில் தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் நிலையில், திருச்சி சாலை முழுவதும் தவெகவினர் கட்சிக் கொடிகளை நடவு செய்தும், சாலையின் விளிம்பில் பள்ளம் தோண்டி அபாயகரமான முறையில் பிளக்ஸ் பேனர்களை வைத்தும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

திருச்சி சாலையில் உள்ள சிங்காநல்லூர் பகுதியில் ஏற்கனவே கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர். இந்தச் சாலை விரிவாக்கம் செய்யப்படாமலும், மேம்பாலம் கட்டும் திட்டமும் செயல்படுத்தப்படாமலும் உள்ளதால், குறுகலான மற்றும் குண்டும் குழியுமான இந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.

இந்தச் சூழலில், சிங்காநல்லூர் எம்எல்ஏ கிரிபிரசாத் தலைமையில் உழவர் சந்தை அருகே தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி சாலை முழுவதும் தவெக தொண்டர்கள் கொடிக்கம்பங்களை நட்டு வைத்துள்ளனர். மேலும், சாலை ஓரம் குழிகளைத் தோண்டி அங்கு விளம்பர பிளக்ஸ்களையும் அபாயகரமான முறையில் வைத்துள்ளனர்.

இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

“மாற்றத்தைக் கொண்டு வருவோம், மாற்றி சிந்திப்போம்” என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெகவினர், பொதுமக்களின் உயிரை மதிக்காமல் இப்படி சாலையோரம் குழிகளைத் தோண்டி கொடிகளை நட்டு, பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

“இதுதான் மக்கள் எதிர்பார்த்த மாற்றமா?” என்று கூறி தலையில் அடித்தபடி வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.

கோவையில் ஏற்கனவே அதிமுக சார்பில் இதுபோன்று சாலையோரம் கொடிக்கம்பம் நட்டு வைத்த நிலையில், அது விழுந்ததில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் விபத்தில் சிக்கி நிரந்தரமாக ஊனமுற்றது குறிப்பிடத்தக்கது.