மறைந்த நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் பூந்தமல்லி அருகே உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறியதுடன், சித்ராவின் கணவரான ஹேம்நாத் மீது புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார், ஹேம்நாத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன்பின் அவர் ஜாமீனில் வெளியில் வந்தார். இதற்கு எதிராக சித்ராவின் குடும்பத்தினர் நீதிமன்றம் சென்றனர்.
அப்போது போதிய ஆதாரம் இல்லாததால் நடிகை சித்ரா கணவர் ஹேம்நாத்தை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை கேட்ட நடிகை சித்ராவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து போலீசாரும் சித்ராவின் குடும்பத்தினரும் மேல்முறையீடு செய்ய
செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் (64) வீட்டில் தனது மகளின் துப்பட்டாவிலேயே தூக்கிட்டு இறந்து கிடந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற காவலரான காமராஜ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து திருவான்மியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.