• Mon. Apr 28th, 2025

கட்டாய ‘சுய நாடுகடத்தலை’ அறிவித்தார் டிரம்ப் !!

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 6,000க்கும் மேற்பட்டோரை இறந்தவர்களின் பட்டியலில் சேர்த்தது டிரம்ப் நிர்வாகம்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவரக்களை அந்நாட்டில் இருந்து வெளியேற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் தங்கியிருக்கும் 6,000க்கும் மேற்பட்டோரை இறந்தவர்களின் பட்டியலில் சேர்த்து அதிரடி காட்டி உள்ளது டிரம்ப் நிர்வாகம். மேலும் அவர்கள் கட்டாயமாக நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த புலம்பெயர்ந்தோர் ஜோ பைடன் அரசாங்கத்தின் திட்டங்களின் கீழ் அமெரிக்காவில் நுழைந்து தற்காலிகமாக தங்க அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் அவர்களை இறந்தவர்களாக கருதும் கடுமையான நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ளது.

புலம்பெயர்ந்தோரின் சமூக பாதுகாப்பு எண்கள் ரத்து செய்யப்படுவதோடு, அவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்கள் மற்ற சலுகைகள் எதுவும் பெற முடியாத சூழ்நிலையையும் டிரம்ப் நிர்வாகம் உருவாக்கியுள்ளது. இந்த புலம்பெயர்ந்தோரை ‘சுயமாக நாடு கடத்துவதற்கும்’, தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கும் அமெரிக்க அரசாங்கம் ஊக்குவிப்பது அரசின் லட்சியம் என்று டிரம்ப் தெளிவுபடுத்தி உள்ளார்.

சமூக பாதுகாப்பு எண்களை நீக்குவதன் மூலம், பல நிதி சேவைகளிலிருந்து அவர்களை விலக்கி, வங்கிகள் அல்லது பிற அடிப்படை சேவைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வழி செய்துள்ளது டிரம்ப் நிர்வாகம். பைடன் அரசாங்கத்தின் காலத்தில் அமெரிக்காவில் நுழைந்த புலம்பெயர்ந்தோரை கைது செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது. சிபிபி ஒன் செயலியைப் பயன்படுத்தி அமெரிக்காவுக்குள் வந்த புலம்பெயர்ந்தோரின் சட்டப்பூர்வ நிலையை உள்துறை பாதுகாப்புத் துறை (டிஎச்எஸ்) கடந்த திங்களன்று ரத்து செய்தது.

ஏறக்குறைய 9 லட்சம் புலம்பெயர்ந்தோர் சிபிபி ஒன் செயலியைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்கு வந்துள்ளனர். இவர்களை குறிவைத்து தான் 6,000 பேரை இறந்தவர்களாக அறிவிக்கும் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பைடன் அரசாங்கத்தின் காலத்தில் ஜனாதிபதி அதிகாரத்தின் ஒரு பகுதியாக 2 வருட தற்காலிக அனுமதியுடன் புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவில் தங்கி வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர். தற்காலிகமாக அமெரிக்காவில் தங்க சட்டப்பூர்வ அனுமதி பெற்ற கியூபா, ஹைதி, நிகரகுவா, வெனிசுலா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த மாதம் இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தாலும், பெடரல் நீதிமன்றம் இந்த உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.