• Thu. Apr 25th, 2024

புதுக்கோட்டையில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்..!

Byவிஷா

Dec 30, 2021

புதுக்கோட்டையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது 11வயது சிறுவனின் தலைமீது குண்டு பாய்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகில் உள்ள அம்மாசத்திரம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாருக்கான (சி.ஐ.எஸ்.எம்) துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இப்பயிற்சி மையத்திற்கு திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த போலீசார் மற்றும் சிறப்புக் காவல்படையினர் தினமும் வருகை தநது துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபாடுவார்கள். இந்தப் பயிற்சியின் போதுதான், துப்பாக்கியில் இருந்த குண்டு சிறுவனின் தலையில் பட்டு மயக்கம் அடைந்துள்ளான்.


புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகேயுள்ள கொத்தமங்களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன், கூலித் தொழிலாளி. இவரது மகன் புகழேந்தி (வயது 11). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.


தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் நார்த்தாமலையில் உள்ள தனது தாத்தா முத்து என்பவரது வீட்டிற்கு வந்திருந்தான். இன்று காலை சிறுவன் புகழேந்தி தனது பாட்டி வீட்டில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். அப்போது அங்கிருந்து சுமார் 1½ கி.மீ. தூரத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியில் இருந்து வெளியான 2 தோட்டாக்கள் மின்னல் வேகத்தில் வந்தன. அதில் ஒரு குண்டு வீட்டின் சுவரிலும், மற்றொரு குண்டு சிறுவன் புகழேந்தியின் இடது தலையிலும் பாய்ந்தது.


அடுத்த விநாடி சிறுவன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தான். இதைப்பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை காரில் தூக்கிக்கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.
உடனடியாக மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் தலைமை மருத்துவர்கள் சிறுவனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். சிறுவனின் இடது தலையில் மிகவும் ஆழமாக துப்பாக்கி குண்டு புகுந்துள்ளதால் அதனை அகற்றும் முதல்கட்ட சிகிச்சையில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். இது தொடர்பாக நார்த்தாமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனாலும் ஆபத்தான நிலையில் சிறுவன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


இதுகுறித்து அவனது தந்தை கலைச்செல்வன் கூறுகையில்,
எனது மகன் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால் பாட்டி வீட்டிற்கு வந்திருந்தான். இன்று காலை அவன் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது அருகிலுள்ள துப்பாக்கி சுடும் மையத்தில் இருந்து பறந்து வந்த குண்டு மகனின் தலையில் பாய்ந்து விட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் கதறிய நாங்கள் உடனடியாக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துள்ளோம். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று கண்ணீருடன் தெரிவித்தார்.


இதுதொடர்பாக கந்தர்வக்கோட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. நார்த்தாமலை ஆறுமுகம் கூறுகையில்,
துப்பாக்கி குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் இருக்கும் சிறுவனை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள். இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தின் அருகிலேயே ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளதால் அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இடையில் சில மாதங்கள் கலெக்டர் தலையிட்டதன் பேரில் பயிற்சி மையம் மூடப்பட்டது. தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இன்று ஒரு சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *