• Fri. Apr 26th, 2024

கொரோனா சான்றிதழ் இருந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

Byகாயத்ரி

Dec 30, 2021

கொரோனா சான்றிதழ் வைத்துள்ள சுற்றுலா பயணிகள் மட்டுமே புதுச்சேரியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘புதுச்சேரி மாநிலத்தில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொதுக்கூட்டம், நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளி, கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர்கள் சமூக இடைவெளி மற்றும் கொரோனா நடத்தை விதிமுறைகளை பின்பற்றுகின்றனரா? என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அப்படி பின்பற்றப்படவில்லை எனில், விழா ஒருங்கிணைப்பாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், அரசால் வழங்கப்பட்ட அனுமதியும் ரத்து செய்யப்படும்.வெளி மாநில சுற்றுலா பயணிகளுக்காக ஹோட்டல்கள், ரிசார்ட் மற்றும் பிற இடங்களில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும்போது வரவேற்பு அறையில் இருப்பவர்கள் பங்கேற்பாளர்களின் கொரோனா தடுப்பூசி சான்றிதழை கட்டாயம் கேட்டு பெற்றிருக்க வேண்டும். இது ஆய்வுக்கு உட்பட்டது. ஆய்வின்போது சான்றிதழின் நகல் இல்லாத ஹோட்டல்கள், ரிசார்ட்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அனுமதியும் ரத்து செய்யப்படும்.

புதுச்சேரி மாநில எல்லைகளில் சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுவர். தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *