பல்கேரியா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ளது சோஃபியா நகரம். அங்கிருந்து 48 கி.மீ தூரத்தில் உள்ள ஸ்ட்ருமா தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில் 53 பேர் இருந்தனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் பேருந்தில் திடீரென்று தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து முழுவதும் மளமளவென எரிந்தது. இதில், பேருந்தில் இருந்த சிலர் காயத்துடன் தப்பினர். சிலர் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மீட்பு படையினர் விரைந்து சென்று கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 46 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து பல்கேரியா அரசின் உள்துறை அமைச்சக அதிகாரி நிகோலாய் நிக்கோலாவ் கூறும்போது, இந்த விபத்தில் 46 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார். விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த சுற்றுலா பயணிகள், தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள வடக்கு மாசிடோனியாவை சேர்ந்தவர்கள். இவர்கள், துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஸ்கோப்ஜே நகருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.