• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நாளை மகாளய அமாவாசை ராமேஸ்வரத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்..!

Byவிஷா

Oct 13, 2023

மகாளய அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதற்காக ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். மகாளய பட்ச காலத்தின் சதுர்த்தசி திதி தர்ப்பணம் தர சிறப்பான நாள் என்பதால் இன்றே ஏராளமானோர் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்துள்ளதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மகாளயம் என்றால் மிகப்பெரிய என்று அர்த்தம். மகாளய அமாவாசை நாளில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் அளித்து வழிபடுபடுவது மரபு. தமிழ்நாட்டில் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் தொடங்கி காவிரி தீர்த்தகரைகள், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடல், முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி வரைக்கும் முக்கிய ஆலயங்களில் பக்தர்கள் தர்ப்பணம் அளித்து வழிபடுவது மரபு.
நம்முடன் வாழும் நம் பெற்றோர்களுக்கு குழந்தைகளுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் இருப்பதுபோல, இறந்தவர்களுக்கும் நாம் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இறந்தபின் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பது அவசியம். பெற்ற தந்தையாக மகனான மகளாக நம்முடன் வாழும் பெற்றோர்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் இருப்பதுபோல, இறந்து போன நம் முன்னோர்களுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இறந்தபின் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பது அவசியம். அவரவர்கள் தங்களின் குடும்ப வழக்கப்படி வீட்டிலோ அல்லது நதிக்கரைகளுக்கோ சமுத்திரக் கரைகளுக்கோ சென்று முன்னோருக்குச் செய்யவேண்டிய வழிபாட்டினை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் எள்ளும் தண்ணீரும் விட்டு வேண்டிக்கொள்வது அவசியம்.
சூரியன் கன்னி ராசிக்கு செல்லும் புரட்டாசி மாதம், எமதர்மராஜன் நமது முன்னோர்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள். பவுர்ணமி முடிந்து பிரதமை முதல் புரட்டாசி அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் எனப்படுகிறது. இந்த நாட்களில் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நாம் கொடுக்கும் தானங்களை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். மகாளய அமாவாசை தினத்தன்று தமிழ்நாட்டில் அதிகாலை முதலே ஏராளமானோர் புனித நீராடி திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.
முன்னோர்கள் இறந்த தேதி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் உணவருந்தும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது. காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது நிஜமாகவே பித்ருக்களின் ஆசி கிடைக்கிறது.
மகாளய பட்ச காலத்தில் விரதம் இருந்தவர்கள் அனைவரும் அமாவாசை தினமான நாளைய தினம் வீட்டில் உணவு சமைத்து முன்னோர்களுக்கு படையலிட்டு காகத்திற்கு வைத்து விட்டு அனைவரும் சாப்பிடுவது நல்லது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்குமென்றும், எமனின் தூதுவனான காகத்துக்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலானது 12 ஜோதிடர் லிங்கங்களில் ஒன்றாகவும், தீர்த்தம் மூர்த்தி ஸ்தலம் என முப்பெருமைகளையும் கொண்டு பாவங்களை போக்கும் முக்கிய ஸ்தலமாகும். மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசை நாளில் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
மேலும், ஆடி, புரட்டாசி, தை போன்ற மாதங்கள் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தம் கடற்கரையில் முன்னோருக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து அக்னி தீர்த்தம் கடலில் புனித நீராடி, கோவிலுக்குள் இருக்கும் 22 புனித தீர்த்தத்தில் நீராடி விட்டு ராமநாதசுவாமியையும், பர்வதவர்த்தினி அம்பாளையும் வழிபடுவார்கள். நாளைய தினம் மகாளய அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் இன்று முதலே ராமேஸ்வரத்திற்கு வருகை தந்துள்ளனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்திடும் வகையில் நான்கு ரத வீதிகளிலும் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருட்டு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கூடுதலாக பிற மாவட்டங்களில் உள்ள காவல்துறையினர் பணி அமர்த்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய இடங்களை ஒருவழிப்பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் நகரின் முக்கிய நகரங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இந்தச் சிறப்பு பேருந்து சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்தும் ராமேஸ்வரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பேருந்துகள் சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படுகின்றன. அதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து அக்.14ஆம் தேதி சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடங்களில் www.tnstc.in மற்றும் tnstc official app மூலமாகவும் முன்பதிவு செய்யப்படுகிறது. மேலும் இந்தச் சிறப்பு பேருந்துகளை கண்காணிக்க அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பேருந்து வசதியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என போக்குவரத்து மேலான் இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.