• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சிக்முந்த் புளோரென்டி வுரூபிளேவ்ஸ்கி பிறந்த தினம் இன்று (அக்டோபர் 28, 1845)…

ByKalamegam Viswanathan

Oct 28, 2023

சிக்முந்த் புளோரென்டி வுரூபிளேவ்ஸ்கி (Zygmunt Florenty Wroblewski) 28 அக்டோபர் 28, 1845ல் உருசியப் பேரரசில் குரோத்னோ நகரில் பிறந்தார். வுரூபிளேவ்ஸ்கி கீவ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். உருசியப் பேரரசுக்கு எதிராக ஜனவரி 1863ல் இடம்பெற்ற கிளர்ச்சியில் பங்குபற்றி ஆறு ஆண்டுகள் வரை மறைவான வாழ்க்கையை மேற்கொண்டார். பின்னர், பெர்லின், ஐடெல்பெர்கு நகரங்களில் படிப்பைத் தொடர்ந்தார். மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகத்தில் 1876ல் முனைவர் ஆய்வுப் பட்டம் பெற்று ஸ்ட்ராஸ்புர்க் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியரானார். 1880ல் போலந்து கல்விக் கழகத்தில் உறுப்பினரானார்.

பாரிசில் பேராசிரியர் கையேட்டே என்பவரால் வளிமங்களைக் குளிர்வித்தல் முறையை ஆராய்வதற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். கிராக்கோவ் ஜகில்லோனியன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். கிராக்கோவில் வளிமங்களைப் பற்றி படிக்க ஆரம்பித்து விரைவில் கரோல் ஒல்சேவ்ஸ்கியுடன் இணைந்து ஆய்வுகளில் இறங்கினார். கார்போனிக் காடியைப் பற்றிய ஆய்வின் போது வுரூபிளேவ்ஸ்கி CO2 ஐதரேட்டைக் கண்டறிந்தார். இது குறித்த அறிக்கையை 1882ல் சமர்ப்பித்தார்.

மார்ச் 29, 1883ல் ஒல்சேவ்ஸ்கியுடன் இணைந்து ஆக்சிசனைக் திரவமாக்கும் முறை ஒன்றைக் கண்டுபிடித்தார். அதே ஆண்டு ஏப்ரல் 13ல் நைதரசனைத் திரவமாக்கினார். 1888ல் வுரூபிளேவ்ஸ்கி நீரியத்தின் இயற்பியல் இயல்புகளை ஆராய்ந்து கொண்டிருந்த போது புகை போக்கி விளக்கு ஒன்று அவர் மீது வீழ்ந்ததில் பெரும் எரிகாயங்களுக்கு உள்ளானார். ஆக்சிசன் (Oxygen) மற்றும் நைட்ரசன் (Nitrogen) திரவமாக்கும் முறையை கண்டுபிடித்த சிக்முந்த் புளோரென்டி வுரூபிளேவ்ஸ்கி ஏப்ரல் 16, 1888ல் தனது 42வது அகவையில் போலந்து, கிராக்கோவ் மருத்துவமனையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 1976 ஆம் ஆண்டில், சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU) வேதியியலாளரின் நினைவாக சந்திரனின் பள்ளங்களில் ஒன்றிற்கு Wróblewski என்ற பெயரை வழங்குவதற்கான முடிவை நிறைவேற்றியது.