• Mon. Dec 9th, 2024

நாளை சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்… பா.ஜ.க புறக்கணிக்க முடிவு..!

Byவிஷா

Nov 17, 2023

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு கையெழுத்திடாமல் ஆளுநர் திருப்பி அனுப்பியதால், மீண்டும் நாளை ஆளுநருக்கு எதிராக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தை பா.ஜ.க புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கவில்லை. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் பல்வேறு கருத்துகளைக் கூறியிருந்தது. இந்நிலையில், நிலுவையில் இருந்த மசோதாக்களை தற்போது ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதில் குறிப்பாக, தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா, பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே செயல்படும் வகையில் திருத்தம் செய்யப்பட்ட மசோதா உள்ளிட்டவற்றை ஆளுநர் மாளிகை திருப்பி அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக நாளை (சனிக்கிழமை) சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை நடத்தி ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அவரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்ப தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. இந்த நிலையில், இந்த சிறப்பு கூட்டத்தை தமிழக பாஜக எம் எல் ஏக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘’சட்ட மசோதாக்களை இயற்றுவது தமிழக அரசின் வேலை என்றால் அதனை ஆராய வேண்டியது ஆளுநரின் வேலை, கண்மூடித்தனமாக எல்லாவற்றிற்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க முடியுமா’’ என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.