• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

உலகின் முதல் அணுகுண்டு லிட்டில்பாய், ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது வீசப்பட்ட தினம் இன்று…

ByKalamegam Viswanathan

Aug 6, 2023

1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டுவரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் ஆரம்பத்தில் ஈடுபடாமல் இருந்த ஜப்பான், பின்னர் ஆசிய பகுதியில் தனது வலிமையை நிரூபிக்கும் பொருட்டு 1941ம் ஆண்டு இப்போரில் இணைந்தது. இத்தாலி மற்றும் ஜெர்மனியுடன் இணைந்து செயல்பட்டது. தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றிய ஜப்பானிய படைகள், இந்தியாவின் கிழக்கு எல்லை வரை முன்னேறின. இப்போரில் 1942ம் ஆண்டுவரை ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் கைதான் ஓங்கி இருந்தது. ஆனால், அதன்பிறகு நிலைமை மாறத் தொடங்கியது. ஆரம்பத்தில் இப்போரில் நேரடியாகப் பங்கேற்காமல் இருந்த அமெரிக்கா, பின்னர் இதில் நேரடியாகக் களம் இறங்கியது. நேச நாடுகளின் கரத்தை வலுப்படுத்தியது. அதே நேரத்தில் ஐரோப்பாவின் கிழக்கு முனையில் ஜெர்மன் படைகளின் முன்னேற்றத்தை ரஷ்யப் படைகள் தடுத்து நிறுத்தின. பல ஆண்டுகள் நீடித்த போருக்குப் பின்னர் 1945ம் ஆண்டு மே மாதம் ஜெர்மனி சரணடைந்தது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் போர் முடிவுக்கு வந்தது. ஆனால், ஆசிய பிராந்தியத்தில் ஜப்பான், போரைத் தொடர்ந்துகொண்டிருந்தது.

இந்நிலையில் 1945ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனா இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டன. ‘பாட்சம் அறிக்கை’ (Potsdam Statement) என்று அழைக்கப்பட்ட அந்த அறிக்கையில், ‘ஜப்பான் அரசு உடனடியாக நிபந்தனை யின்றி சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் அந்நாடு மிகப்பெரிய பேரழிவைச் சந்திக்கும்’ என்று எச்சரிக்கப்பட்டது. ஆனால், ஜப்பான் பிரதமரான கண்டாரோ சுசுகி, இந்த எச்சரிக்கையைப் புறக்கணித்தார். இதனால் ஜப்பான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பிரிட்டனும் அமெரிக்காவும் திட்டமிட்டன. இதற்கு அவர்கள் முதலில் தேர்ந்தெடுத்த நகரம் ஹிரோஷிமா. சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் வசித்துவந்த ஹிரோஷிமா, அப்போது ஜப்பானின் முக்கிய நகரமாக இருந்தது. போரில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் இங்கிருந்துதான் அனுப்பப்பட்டு வந்தன. இதனால்தான் முதலில் ஹிரோஷிமாவை அமெரிக்காவும் பிரிட்டனும் குறிவைத்தன.

இந்தத் திட்டத்தின்படி ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி காலையில் பசிபிக் கடற்பகுதியில் உள்ள டினியான் (Tinian) என்ற இடத்திலிருந்து எனோலா கே (Enola Gay) என்ற போர் விமானத்தில் ‘லிட்டில்பாய்’ என்ற அணுகுண்டு ஏற்றி அனுப்பப்பட்டது. ஹிரோஷிமா மக்கள் காலையில் எழுந்து சோம்பல் முறித்துக்கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் மீது ‘லிட்டில் பாய்’ வீசப்பட்டது. ‘எனோலாகே’ என்ற விமானம் ‘லிட்டில் பாய்’ என்ற அணுகுண்டை காலை 8.15 மணிக்கு இரோசிமா நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் போட்டது. அணுகுண்டைத் தாங்கி வந்த விமானத்தை ஓட்டிய விமானியும் படைத் தளபதியுமான ‘பால்டிப்பெட்ஸ்’ என்பவரின் தாயார் பெயர்தான் ‘எனோலாகே’ என்பதாகும். அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து நகரத்திற்கு 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன. 90,000 மக்கள் செத்து மடிந்தனர். மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தது. கட்டடங்கள் தரைமட்டமாயின. தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் ஜப்பானில் வேறு பகுதிகளில் வசித்தவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூட அழிவின் வீச்சு என்ன என்பதை தொடக்கத்தில் தெரிந்து கொள்ள இயலவில்லை.

அணுகுண்டு வீசப்பட்ட சிறிது நேரத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமேன், ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அறிவித்ததுடன், “இனியும் ஜப்பான் சரணடையாவிட்டால் அடுத்தகட்ட தாக்குதல் நடக்கும்” என்று எச்சரித்தார். ஆனால், அதன் பிறகும் ஜப்பான் சரணடையவில்லை. இதைத்தொடர்ந்து அந்நாட்டின் மீது மேலும் ஒரு அணுகுண்டு தாக்குதலை நடத்த அமெரிக்காவும், பிரிட்டனும் திட்டமிட்டன. இம்முறை தாக்குதல் நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட நகரம் நாகசாகி. ஜப்பானின் துறைமுக நகரமான நாகசாகியைத் தாக்க ஆகஸ்ட் 9-ம் தேதி ‘போக்ஸ்கார்’ (Bockscar) என்ற விமானத்தில் ‘ஃபேட்மேன்’ என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த அணுகுண்டை வீசுவதற்காக அனுப்பப்பட்ட வீரர்களில் ஒருவர் லெப்டினென்ட் சார்லஸ் லெவி . பிலடெல்பியாவைச் சேர்ந்த இவர், படமெடுப்பதிலும் கெட்டிக்காரராக இருந்தார். அணுகுண்டை வீசுவதற்காக செல்லும் குழுவில் தான் இருப்பதாகத் தெரிந்துகொண்டதும் அதைப் படம்பிடிக்கும் ஆர்வத்தில் மறக்காமல் தனது கேமராவையும் எடுத்துக்கொண்டு சென்றார். ஆகஸ்ட் 9ம் தேதி காலை 11 மணிக்கு, நாகசாகி மீது 2வது அணுகுண்டு வீசப்பட்டது.

வெடிகுண்டு மண்ணில் விழுந்து, அதன் ஜுவாலைகள் மிகப்பெரிய அளவில் எழும்ப, அதைத் தனது கேமராவால் துல்லியமாகப் படம்பிடித்தார் சார்லஸ் லெவி. உலகின் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகவும், அணுகுண்டின் அழிவுகளைப் பற்றி எடுத்துச் சொல்லும் படமாகவும் இன்றுவரை இப்படம் விளங்குகிறது. ஆகஸ்ட் 15,1945ல் அதாவது, நாகசாக்கியில் அணுகுண்டு வீசப்பட்ட ஆறாம் நாள், ஜப்பான் போரில் தோல்வியை ஏற்று நேசநாடுகளின் முன் சரணடைந்தது. அதே ஆண்டு, செப்டம்பர் மாதம் ஜப்பான் “சரண் ஆவணத்தில்” (Japanese Instrument of Surrender) கையெழுத்திட்டது. இவ்வாறு இரண்டாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பான் நாடு உலக அமைதியைப் பேண உறுதிபூண்டது. 1967ல் ஜப்பான் “அணு ஆயுத விலக்கு பற்றிய மூன்று தத்துவங்கள்” (Three Non-Nuclear Principles) கொள்கையைத் தனக்கென்று வகுத்துக்கொண்டது. போரில் ஜப்பான் அணுகுண்டு அழிவைச் சந்தித்ததும் அக்கொள்கை உருவாக்கத்திற்குக் காரணமாக அமைந்தது. ஜப்பான் ஏற்ற மூன்று தத்துவங்கள் பின்வருமாறு:
ஜப்பான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யாது. அணு ஆயுதங்களைக் கைவசம் கொண்டிராது. அணு ஆயுதங்கள் ஜப்பானுக்குள் வர இசையாது. இக்கொள்கைகள் ஜப்பானிய மக்களின் ஒட்டுமொத்த அனுபவத்தை எதிரொலித்தன. அவை நாடாளுமன்றத்தால் சட்டமாகப் பிரகடனம் செய்யப்படாவிட்டாலும், “தீர்மானங்களாக” (Resolutions) நிறைவேற்றப்பட்டன.

ஹிரோஷிமா, நாகசாகி குண்டு வீச்சுகளுக்கு பிறகு, சுமார் இரண்டாயிரம் தடவைகள் சோதனைகளுக்காக பல்வேறு நாடுகளால் அணுகுண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியமும் தனது முதல் அணுஆயுதத்தை சோதனையைச் செய்தது. அமெரிக்காவுக்கும், சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே நடந்த கடும் ஆயுத போட்டியின் விளைவாக, 1950களில் ஐதரசன் அணுகுண்டு கண்டுபிடிக்கபட்டது. 1960களில் எற்பட்ட ஏவுகணை தொழிநுட்ப வளர்ச்சியினால், அணுஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. அணுகுண்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்த நாடுகளாக உறுதிசெய்த நாடுகள் முறையே (காலமுறைபடி) ஐக்கிய அமெரிக்க நாடுகள், இரசியா, இங்கிலாந்து, பிரான்சு, சீனா, இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் வட கொரியா. பிற சில நாடுகளும் அணு ஆயுத தொழில் நுட்பத்தை தெரிந்துகொண்டிருக்கலாம் என்ற ஐயம் இருப்பினும், முழுமையாக அதை உறுதிசெய்ய இயலவில்லை. உதாரணமாக, இஸ்ரேல் அணுஆயுதவான்வழி தாக்குதலுக்கு பயன்படுத்தபடும் சில துணைக்கருவிகளை உருவாக்கியுள்ளதை கருத்தில்கொண்டால், அது அணுஆயுதங்களை கொண்டுள்ளதோ என்ற ஐயம் எழுவது திண்ணம். அண்மைகாலமாக, ஈரான் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ள முயலுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

அணுக்கருப் பிளவு ஆயுதங்களில் பிளவுறு பொருளொன்று (செறிவாக்கப்பட்ட யுரேனியம் அல்லது புளூட்டோனியம்) அவதித் திணிவிலும்-அடுக்குக்குறி வளர்ச்சியுடைய கருச் சங்கிலித் தாக்கத்தை ஏற்படுத்தத் தேவையான திணிவு-சிறிது கூடியளவில் சேர்க்கப்படும். இதற்காக இரண்டு முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. முதல் வகையில் அவதித் திணிவிலும் குறைந்த பிளவுறு பொருளின் மீது இன்னொரு சிறு திணிவுடைய பிளவுறு பொருள் பாய்ச்சப்படும். மற்றைய வகையில் இரசாயன வெடிபொருள்களைப் பயன்படுத்தி பிளவுறு பொருள் நெருக்கப்பட்டு அதன் அடர்த்தி மிக அதிகமாக்கப்படும். இரண்டாவது முறையானது முதலாவது முறையிலும் மிகவும் சிக்கலானது என்பதுடன், புளூட்டோனியம் வகை ஆயுதங்களில் மாத்திரமே பயன்படுத்தப்படும்.

அணுக்கரு ஆயுத உருவாக்கத்தில் உள்ள பாரிய சவால் அணுவாயுதம் தானாக அழிவதற்கு முன் குறிப்பிட்டளவு எரிபொருளை பெற்றுக்கொள்வதாகும். பிளவு ஆயுதங்களினால் வெளியிடப்படும் சக்தி ஒரு தொன் TNT அளவு சக்தியிலிருந்து 5லட்சம் தொன் TNT அளவு வரை வேறுபடும். அணுக்கருப் பிளவுக் குண்டின் பரிசோதனையின்போது அண்ணளவாக 20,000 தொன் TNTயின் சக்தி வெளியிடப்பட்டது. அணுவாயுதங்களில் முக்கிய பிளவுப் பொருளாகப் பயன்படுவது யுரேனியம்-235 மற்றும் புளூட்டோனியம்-239 என்பனவாகும். மிகவும் குறைந்தளவில் பயன்படுவது யுரேனியம்-239 ஆகும். நெப்டியூனியம்-237 மற்றும் அமெரீசியத்தின் சில சமதானிகளும் பயன்படுத்தப்படலாம். எனினும் இச் சமதானிகள் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் இல்லை.
உலக வரலாற்றில், அணுவாயுதங்கள் நாட்டின் ராணுவ பலத்தின் சின்னமாகவும், ராணுவ தொழிநுட்ப வளர்ச்சியை பறைசாற்றும் முயற்சியாகவும் கருதப்பட்டன. அமெரிக்காவுக்கும், சோவியத் குடியரசுக்கும் இடையே நடந்த பனிப்போரின்போது, அணுஆயுதப் பரிசோதனைகள் எச்சரிக்கை சமிக்கைகள் போல் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு பனிப்போர் நடந்து கொண்டிருக்கும் காலத்தில், மற்ற சில நாடுகளும், அணுஆயுத தொழிநுட்பத்தை கற்றுக்கொண்டு இருந்தன. அவையாவன, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா. இந்த ஐந்து அணுஆயுத நாடுகளும் இணைந்து அணுஆயுத பரவலை தடுக்க வழிசெய்யும் ஓர் ஒப்பந்ததை (NPT) உருவாக்கி, மற்ற நாடுகளையும் அதில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தின. அணுஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் சரத்துகள் விவாதத்துகுரியவையாக சில நாடுகள் கருதியமையால், இந்த ஒப்பந்தம் முழு வெற்றி அடையவில்லை. ஒப்பந்தத்தை விட்டு விலகி சில நாடுகளும் (வட கொரியா), ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் சில நாடுகளும் (இந்தியா, பாக்கிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, மற்றும் இஸ்ரேல்) அணுஆயுத தொழிநுட்பத்தை அடைந்தன. 1990களின் தொடக்கத்தில், பனிப்போர் முடிவுற்ற சூழ்நிலையில, அமெரிக்காவும், ரஷ்ய கூட்டமைப்பும், தம் அணுஆயுதங்களை படிப்படியாக குறைத்துக் கொள்வதாக அறிவித்தன.