• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மக்களின் பசிப்பிணி போக்கிய வள்ளலார் பிறந்ததினம் இன்று

Byவிஷா

Oct 5, 2024

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற வாக்கியத்துக்கு சொந்தக்காரரும், மக்களின் பசிப்பிணி போக்கியவருமான வள்ளலாரின் பிறந்ததினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
வள்ளலார் எனப்படும் இராமலிங்க அடிகளார் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள மருதூரில் ராமையா பிள்ளை – சின்னம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.
1850ஆம் ஆண்டு ராமலிங்க அடிகளாரருக்கு அவரது மூத்த சகோதரியின் மகளான தனக்கொடி எனும் பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். எனினும் திருமணம் முடித்த அன்று இரவே திருமண வாழ்க்கையை துறந்து, துறவு வாழ்க்கை மேற்கொண்டு உலக மக்கள் மற்றும் இன்ன பிற உயிரினங்களின் துயர் போக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.
1858 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து கடலூர் சென்ற இராமலிங்க அடிகளார், அங்கு 1865 ஆம் ஆண்டு “சமரச சன்மார்க்க சபை” என்கிற அமைப்பை ஏற்படுத்தினார். இதன் மூலம் மக்களுக்கு கடவுள் ஒருவரே, அவர் ஜோதி வடிவானவர், ஜீவகாருண்யம், பிற உயிர்களின் பசி போக்குதல், சாதி சமய வேறுபாடுகள் அற்ற சமுதாயத்தை உருவாக்குவதுப் போன்ற கொள்கைகளை பரப்பி வந்தார்.
ஒரு முறை தனது ஆன்மீக சிந்தனை கருத்துக்களை எழுதிக் கொண்டிருந்த பொழுது இரவு வேளை ஆகிவிட்ட படியினால் தீபத்தை வைத்துக்கொண்டு வள்ளலார் எழுதிக் கொண்டிருந்தார். அப்பொழுது தீபத்தில் எண்ணெய் குறைந்து தீபம் அணைய தொடங்கிய பொழுது வள்ளலார் அந்த தீபத்தில் எண்ணையை ஊற்றுவதற்கு பதிலாக தண்ணீரை ஊற்றிவிட்டார். இருந்தும் அந்த தீபம் அணையாமல் எண்ணெயை ஊற்றியது போல சுடர்விட்டு எரிந்தது. இந்த காட்சியை அங்கிருந்த மக்கள் பலரும் கண்டு வள்ளலாரின் யோக ஆற்றலை எண்ணி வியந்தனர்.

தன் வாழ்நாளில் சாதி – சமய வேறுபாடுகளற்ற சமுதாய உருவாக்க அரும்பாடுபட்டவரும், மக்களுக்கு மெய்யான இறைவழியை காட்டி அவர்களை இறைநிலையை அடைய தொடர்ந்து முயற்சித்தவருமான வள்ளல் பெருமான் எனப்படும் வள்ளலார் அவர்கள் 1874 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி தைப்பூச திருநாள் அன்று வடலூரில் உள்ள சித்தி வளாகத்தில் ஒரு தனி அறைகுள்ளாக சென்று தாழிட்டுக் கொண்டார். தான் தாழிட்டுக்கொண்ட அறையை யாரும் ஒரு வருட காலத்திற்குள்ளாக திறக்க கூடாது என தன் சீடர்களுக்கு கட்டளை இட்டார்.
அதன்படியே ஒரு வருட காலம் கழித்து வள்ளலார் தாளிட்ட அறையை திறந்து பார்த்த பொழுது அங்கு வள்ளலார் இருந்ததற்கான அடையாளம் ஏதுமே இல்லை என்பதை கண்டு அவரது சீடர்கள் வியப்புற்றனர். ஈடு இணையில்லா தவ யோகியாக திகழ்ந்த வள்ளலார் ஒளியுடல் பெற்றவர் என்றும், எனவே ஜோதி வடிவான இறைவனுடன் தன்னுடைய தேகத்தை ஒளி வடிவாகி கலந்துவிட்டார் என அவரது சீடர்கள் நம்புகின்றனர். அதன்படியே இன்றும் தைப்பூசத் திருநாள் அன்று சித்தி வளாகத்தில் வள்ளலார் ஜோதி நிலை அடைந்த அறையில் ஜோதி தரிசனம் பக்தர்களுக்கு காட்டப்படுகிறது.