• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

இன்று இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த தினம்

ByKalamegam Viswanathan

Apr 17, 2023

கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்ட இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 17, 1756)
தீரன் சின்னமலை ஏப்ரல் 17, 1756ல் ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்தார். அவரின் தந்தையார் ரத்னசாமி கவுண்டர், தாயார் பெரியாத்தா. இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. பொது மக்களிடம் இருந்து வசூல் செய்யப்படும் வரியின் அளவு மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் அளவுக்கு இருந்துள்ளது. கோபமடைந்த தீர்த்தகிரி இதற்கு ஒரு வழிசெய்ய வேண்டுமென்று, வசூலித்த வரியை சங்ககிரி மலை வழியாக மைசூருக்கு எடுத்துச்செல்லும்போது அதை வேட்டையாடி ஏழை மக்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று திட்டம் போட்டார்.

ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி திட்டம் போட்டது போன்றே பல மாட்டு வண்டிகளில் கொண்டுவரப்பட்ட மக்களின் வரிப்பணத்தை தனது நண்பர்களுடன் வேட்டையாடினார். அப்போது திவான் முகமது அலி,” யார் நீ?” என்று தீர்த்தகிரியிடம் கேட்க, தீர்த்தகிரி சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அத்தருணத்திலிருந்து கொங்கு நாடு முழுவதும் மக்களுக்கு பரிச்சயமான பெயர்தான் சின்னமலை. அன்றே அவர் கூறியதாகச் சொல்லப்படும் இந்த வாக்கியம் இன்றும் தமிழகமெங்கும், முக்கியமாக கொங்கு மண்டலத்தில் புகழ் பெற்றது. பெற்றோரால் தீர்த்தகிரி சர்க்கரை என்று வைக்கப்பட்ட பெயர் தீரன் சின்னமலையாக மாறியது இந்த சங்ககிரிமலை கோட்டையில்தான்.

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்று சேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். டிசம்பர் 7, 1782ல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். சின்னமலையாக மாறியதற்குக் காரணமாக இருந்தவர் ஹைதர் அலி அரசர், திப்பு சுல்தானின் தந்தைதான் இவர். பழைய பகையை நினைக்காமல் இவர்கள் இருவரும் தங்களின் ஒரே எதிரி ஆங்கிலேயர்கள்தான் என்று முடிவு செய்து கூட்டணி வைத்து போர் செய்தார்கள். இந்தக் கூட்டணி மூன்று மைசூர் போர்களில் தொடர்ச்சியாக வெற்றிகண்டது. மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார்.

நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799ல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து அரச்சலூர் அருகே ஓடாநிலைக் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கனவே ஏப்ரல் 18, 1792ல் தான் வாங்கிய சிவன்மலை – பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார். போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாச்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800ல் கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் கவுண்டர், தேவர், வன்னியர், வேட்டுவர், நாயக்கர், நாடார், தாழ்த்த பட்டோர் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். கருப்பசேர்வை, ஓமலூர் சேமலைப் படையாச்சி, முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன், ஃபத்தே முகம்மது உசேன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். 1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.

சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர். இதுபோன்ற மாவீரர்களை கவிழ்ப்பதற்கு என்றே ஒரு திட்டம் ஆங்கிலேயர்களால் அக்கால கட்டத்தில் வகுக்கப்பட்டிருந்தது. அது சூழ்ச்சி, நம்பிக்கை துரோகம். என்னதான் அனைத்து தற்காப்பு மற்றும் போர் கலைகளில் சிறந்து விளங்கியிருந்தாலும் அவரால் துரோகம் என்னும் ஆயுதத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியவில்லை. தீரன் சின்னமலையின் சமையல்காரர் நல்லப்பனுக்கு ஆங்கிலேயர்களால் ஆசை வார்த்தைகள் காட்டினார்கள். அதற்கு அவரும் மயங்கினார். மயங்கியவுடன், சின்னமலை தன்னுடைய தம்பிகளுடன் பழனிமலை காடுகளில் இருப்பதாக ஆங்கிலேயர்களுக்கு தெரிவித்திருக்கிறார்.

உடனடியாக ஆங்கிலேயர்கள் மொத்த படையையும் அழைத்துக்கொண்டு சென்று, அந்த வனத்தில் இருந்த சின்னமலையையும் அவரின் தம்பிகளையும் கைது செய்தனர். கைது செய்த பின்னர் சங்ககிரி மலைக்கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆங்கிலேய படை 1805ம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தீரன் சின்னமலையையும், அவரது தம்பிகளையும் தூக்கிலட திட்டமிட்டு, மலையின் மேல் இருக்கும் கோட்டையில் ஒரு தூக்குமேடை அமைத்தது ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். அவருடன் சின்னமலையின் தம்பியர்களும், படைத்தலைவர் கருப்பசேர்வையையும் தூக்கிலிட்டனர். தீரன் சின்னமலை என்று பெயர் வர காரணமாக இருந்த சங்ககிரி மலையிலேயே அவரது உயிரும் பறித்துச்செல்லப்பட்டது. என்னதான் அவருடைய உயிர் பிரிந்தாலும் மக்களுக்காக அவர் செய்த தொண்டும், இந்த நாட்டிற்காக அவர் செய்த போர்களும் வரலாற்றால் அழிக்கமுடியாத ஒன்று.

முன்பு தீரன் சின்னமலை நினைவாக திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாக கொண்டு போக்குவரத்துக் கழகமும், கரூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்ததுள்ளது. தமிழக அரசின் சார்பில் ஓடாநிலைக் கோட்டையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர். இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31 ஜூலை 2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. 2012ம் ஆண்டு தமிழக அரசால், இவர் தூக்கிலிடப்பட்ட ஊரான சங்ககிரியில் இவருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டது. அவ்வாறே கட்டி முடிக்கப்பட்ட மண்டபம் டிசம்பர் 23, 2013ல் திறக்கப்பட்டது. அதே நாளில், கிண்டியிலுள்ள இவரது உருவச்சிலையும் புதுப்பிக்கப்பட்டு, இவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் வெளியிடப்பட்டது.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.