1992 டிசம்பர் 22 -ல் ஐக்கிய நாடுகள் சபை, அக்டோபர் 17 ஐ உலக வறுமை ஒழிப்பு நாளாக அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 சர்வதேச வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது. வறுமையை ஒழிக்கவும் வறுமையில் வாழும் மக்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இது கடைபிடிக்கப்படுகிறது.
உலக வங்கியின்படி, 2020 ஆம் ஆண்டில் உலகை தாக்கிய கொரோனா 8 முதல் 11 கோடி மக்களை வறுமைக்கு தள்ளி உள்ளதாகவும், தெற்காசிய மற்றும் சஹாரா நாடுகளில் புதிய ஏழைகள் பெரும்பான்மையினர் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு14 முதல் 16 கோடி ஆக அதிகரித்திருக்கலாம் எனவும் தெரிவித்து உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ், “தற்போது தீவிர வறுமை அதிகரித்து வருகிறது, கொரோனா உலகில் உள்ள நாடுகளின் பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது உலகின் வடக்கு மற்றும் தெற்கிற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளை மேலும் ஆழமாக்கியுள்ளது” என்று கூறி உள்ளார்.
இந்தநிலையில், இந்த ஆண்டின் கருப்பொருள் “ஒன்றாக முன்னேறுதல், தொடர்ந்து கொண்டிருக்கும் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருதல், நமது கிரகத்தையும் அனைத்து மக்களையும் மதித்தல்” என்பது குறிப்பிட்டதக்கது.