• Tue. May 7th, 2024

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா..!

ByKalamegam Viswanathan

Oct 13, 2023

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா, கந்த சஷ்டி விழா, பங்குனி திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படும்.

இதில் மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா கிராம மக்கள் சார்பில் விவசாயம் செழிக்க வேண்டியும், நக்கீரர் சாப விமோசனத்தை நினைவு கூறும் வகையிலும் கொண்டாடப்படும் திருவிழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று நடைபெற்றது. இதற்காக திருப்பரங்குன்றம் கோயில் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி திருகரத்தில் உள்ள தங்க வேலுக்கு மூலஸ்தானத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கரித்து பல்லக்கில் வைத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து பல்லாக்கில் வைக்கப்பட்ட வேல் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள காசி விஸ்வநாதர் தீர்த்தத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு வேலுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து அங்குள்ள குமரருக்கு சுப்பிரமணிய சுவாமியின் தங்கவேல் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இதில் திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் கிராம மக்கள் சார்பாக கதம்ப சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதனை அடுத்து மலைக்கு கீழ் உள்ள பழனியாண்டவர் சன்னதிக்கு வேல் கொண்டு வரப்பட்டு, அங்கு பழனியாண்டவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற்று, சிறப்பு தீப தூப ஆராதனைகள் நடைபெறும். மாலை வரை வேல் பழனி ஆண்டவர் திருக்கரத்தில் இருக்கும். இரவு 7 மணியளவில் பூ பல்லக்கு அலங்காரத்தில் வேல் பழனியாண்டவர் கோயிலில் இருந்து புறப்பாடாகி, திருப்பரங்குன்றம் கோயிலை வந்தடையும். விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *