• Sat. Apr 27th, 2024

திருமங்கலம் புதிய பேருந்து நிலைய விவகாரம்..,மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Byவிஷா

Aug 25, 2023

திருமங்கலம் புதிய பேருந்து நிலைய விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மதுரை திருமங்கலம் பேருந்து நிலைய கட்டிடம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பல் வேறு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், “திருமங்கலம் நகராட்சியில் நகர் பகுதியில் 37 ஆண்டுகளுக்கு முன்பாக திருமங்கலம் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. மக்கள் தொகையும் வாகனங்களும் அதிகரித்த நிலையில், வேங்கட சமுத்திரம் கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு எடுக்கப்பட்டு, சுமார் 22 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்ட மதிப்பீடும் வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. தற்போது வேங்கடசமுத்திரம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு பதிலாக திருமங்கலம் நகர் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தை இடித்து மீண்டும் கட்ட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்க குத்தகை மற்றும் வாடகைதாரர்களை காலி செய்ய நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எனவே, திருமங்கலம் நகராட்சி பேருந்து நிலையத்தை இடிக்கவும், மறு கட்டமைப்பு செய்யவும் அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, அரசாணையின் அடிப்படையில் வேங்கட சமுத்திரம் கிராமத்தில் திருமங்கலம் நகராட்சிக்கான புதிய பேருந்து நிலையத்தை கட்ட உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்துள்ள உத்தரவில்,
“திருமங்கலத்தில் தற்போதுள்ள பேருந்து நிலையம் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக தெரிகிறது. இது ஒரு கான்கீரிட் கட்டிட பேருந்து நிலையம் ஆகும். 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில்களை நாம் இப்போதும் பார்க்கிறோம். அதேபோல அணைகள் மற்றும் பிற பழமையான கட்டமைப்புகள் இன்றும் கம்பீரமாக உள்ளன. ஆனால் நவீன யுகத்தில் ஒரு கட்டிடம் வெறும் 35 ஆண்டுகள் மட்டுமே பயன்படும் வகையில் இருந்தால் நாம் எங்கு செல்கிறோம் என்பது தெரியவில்லை. எனவே திருமங்கலம் பேருந்து நிலையத்தை அதன் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்ய திருச்சி என்ஐடி நிபுணர் குழு அமைத்து உத்தரவிடப்படுகிறது.
இக்குழு திருமங்கலம் பேருந்து நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும். நிபுணர் குழு திருமங்கலம் பேருந்து நிலையத்தின் ஆயுட்காலம் குறித்து தெரிவிக்க வேண்டும். திருமங்கலம் பேரூராட்சி ஆணையர் திருமங்கலம் பேருந்து நிலையம் கட்டுமான பணிகளுக்காக செலவிடப்பட்ட தொகை குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
திருமங்கலம் நகராட்சி ஆணையர் வாடகை மற்றும் வணிக வளாகத்திலிருந்து நகராட்சிக்கு கிடைக்கு வருவாய் குறித்த முழு விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். 35 ஆண்டுகளுக்கு முன் பேருந்து நிலையத்தை கட்டிய ஒப்பந்ததாரரின் விவரங்களையும், மோசமான கட்டுமானத்திற்காக ஒப்பந்ததாரரை தடுப்புப்பட்டியலில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் மதுரை காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருமங்கலம் காவல் நிலைய காவல் கண்காணிப்பாளர் (போக்குவரத்து) ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
திருமங்கலம் பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த விபத்துகளின் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *